ஐக்கிய மக்கள் சக்தியில் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகிய இருவரில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளனர்.

இதன்போதே வரவு- செலவுத் திட்டம் தொடர்பான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்டது.

நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தினார். ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் முதல் வாசிப்பு கடந்த செப்ரெம்பர் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்திற்கு மொத்தம் ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.

குழு நிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் நடைபெற்ற பின்னர், மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.