யாழிலிருந்து சட்டவிரோதமாக இராமேஸ்வரம் சென்ற இளைஞன் புழல் சிறையில்

3 hours ago

இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சட்டவிரோதமான முறையில் படகில் இராமேஸ்வரம் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 34) எனும் இளைஞனே கைது செய்யப்பட்டு , தற்போது புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, 

குறித்த இளைஞனின் மனைவி மண்டபம் முகாமில் தங்கியுள்ளார். அவரை பார்ப்பதற்காக கடந்த 06ஆம் திகதி வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து படகில் வேதாரண்யம் பகுதிக்கு , சென்று இறங்கியுள்ளார். அங்கிருந்து பேருந்தில் இராமேஸ்வரம் வந்து , மண்டபம் அகதி முகாமில் உள்ள மனைவியை பார்வையிடுவதற்காக , இராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் தங்கியிருந்த வேளையே கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து , இலங்கை பணம் , இலங்கை கடவுச்சீட்டு , அடையாள அட்டை என்பவற்றை பொலிஸார் மீட்டிருந்தனர். 

விசாரணைகளின் பின்னர் , நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்தார் என வழக்கு பதிவு செய்து , நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டதை அடுத்து , புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.