நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 50 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ‘மஹரகம அக்கா’ என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பெண் நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் வாடிக்கையாளர்களுடன் ஈஸி கேஷ் வழியாகப் பணப் பரிமாற்றம் செய்து வந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
மேலும், போதைப்பொருள் பெற்றுக்கொண்டவர்களின் தொலைபேசிப் பதிவுகளைப் பகுப்பாய்வு செய்த நிலையில் சந்தேக நபர் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த 6 ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அவருடைய இல்லத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் ரூபா 1,41,000 பணம் மற்றும் 32 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.











