2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக சதொச நிறுவனம் ஊடாக 14,000 கேரம் பலகைகளையும், 11,000 தாம் பலகைகளையும் இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு ரூபாய் 53 மில்லியன் வரையான நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்குத் தொடர்பாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதனால், பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களைக் கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நிராகரித்துள்ளது.
தீர்ப்பைப் பிரகடனம் செய்த நீதிபதிகள் குழாம், நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதிவாதி, மேன்முறையீட்டின் கீழ் பிணை கோரும்போது, விசேடமான காரணங்களை முன்வைப்பது அத்தியாவசியமானது எனவும் ஆனால், இந்த இரண்டு பிரதிவாதிகளும் முன்வைத்த காரணங்கள் பிணை வழங்குவதற்குப் போதுமான விசேடமான காரணங்கள் அல்ல என்பதால், அவர்களது பிணை மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் குழாம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.










