சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

3 hours ago

ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகளுக்குத் தினமும் 3 மணி நேரம் இலவச மின்சார வழங்கும் சோலார் ஷேரர் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரும் ஜூலைக்குள் எரிசக்தி சேமிப்பு திட்டமான சோலார் ஷேரர் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் கீழ், அனைத்து வீடுகளுக்கும் தினமும் குறைந்தது 3 மணி நேரம் இலவச சூரிய மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது என அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் போவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கிறிஸ் போவன், சோலார் ஷேரர் திட்டத்தின் மூலம் மின்சார சில்லறை விற்பனையாளர்கள் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள வீடுகளுக்குத் தினமும் குறைந்தது மூன்று மணிநேரம் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும், அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும் இத்திட்டத்தின் மூலம் பகல் நேரத்தில் பயனர்கள் இலவச சூரிய மின்சாரத்தைப் பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இத்திட்டம் குறித்த அறிவிப்பால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மின்சார சப்ளையர்களாக இருக்கும் ஏஜிஎல், ஆரிஜின் எனர்ஜி போன்ற நிறுவனங்களில் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்துள்ளன.