இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

3 hours ago

இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியா – ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை 450 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று எதிரி இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.

இதனைப் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். நம் ராணுவத்தின் முப்டைகளிலும் பிரம்மோஸ் செயல்பாட்டில் உள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூரின்போது, இதன் வலிமையை பார்த்த உலக நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய முனைப்பு காட்டி வருகின்றன.

அந்த வகையில், இந்தியா – இந்தோனேஷியா இடையே 450 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கிட ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து கடந்த ஜனவரியில் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவிடம் விரிவான ஆலோசனையும் நடைபெற்றது.

இந்நிலையில் இதுகுறித்த பேச்சுவார்த்தைகளில் கிட்டத்தட்ட அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்ததாகவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்ய தரப்பிலிருந்து ஒப்புதல் மட்டுமே தேவை என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.