பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவியில் தொடர்வதற்கு வசதியாக அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நிலைகள்மீது இந்தியா ராணுவ தாக்குதல் நடத்தி பாடம் புகட்டியது.
சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்தப் போரில் மண்ணை கவ்வியதை மறைக்க உலக அரங்கில் பாகிஸ்தான் பல்வேறு நாடகங்களை நடத்தியது.
அதன் பயனாகக் கடந்த 2022 முதல் பாகிஸ்தானின் 11-வது ராணுவ தளபதியாகப் பணியாற்றிய அசிம் முனீருக்கு, பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் வரும் 27-ம் தேதியுடன் அசிம் முனீர் ஓய்வு பெற உள்ளார்.
அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ராணுவ தளபதிக்கே பதவி நீட்டிப்பு வழங்க முடியும்.
இதனால் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வசதியாக, பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின் 243வது பிரிவில் திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இச்செயல் அசிம் முனீரின் கைப்பாவையாகவே பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பின் அரசு செயல்படுகிறது எனும் விமர்சனத்துக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.











