யாப்புக்கு முரணாக நடந்த கூட்டம் : தமிழரசுக்கட்சி தலைமைகளுக்கு பறந்த கடிதம்

22 hours ago

தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதி கிளையின் பழைய உறுப்பினர்களுக்கு தெரியாமல் கடந்த மாதம் 21ஆம் திகதி உபவிதிக்கு முரணாக கூட்டம் இடம்பெற்றதாக காங்கேசன்துறை கிளையின் தற்போதைய தலைவர் சா.செ.இளங்கோபனால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் (C. V. K. Sivagnanam) மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) ஆகியோருக்கும், மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச் செயலாளரான ஆகிய தங்களின் முன்னிலையில் 21.10.2025 அன்று மாவட்டபுரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிக்கிளை நிர்வாகத் தெரிவுக் கூட்டம் நடைபெற்றதாக ஊடகங்கள் மூலம் அறிகின்றோம்.

வலி-வடக்கு பிரதேச சபை

கணிசமான தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் தொகுதியில் உள்ள போதும், இக்கூட்டத்தில் வலி-வடக்கு பிரதேச சபையுடன் தொடர்புடைய ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் இக்கூட்டம் வலி-வடக்கு பிரதேச அபிவிருத்தி தொடர்பான தென்ற தெளிவின்மையும் தோற்றியுள்ளது.

 தமிழரசுக்கட்சி தலைமைகளுக்கு பறந்த கடிதம் | Itak Kks Branch Letter To Cvk Sivagnam Sumanthiran

எப்படியிருப்பினும் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக யாப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட தொகுதிக் கிளை ஒன்று இருக்கும் போது அக்கிளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் இன்னொரு புதிய கிளை அமைக்கப்பட்டிருக்க முடியாது என்றே நம்புகின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கங்கேசன்துறைக் கிளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு என்ற பொறுப்புடன் 2025, ஒக்டோபர் 21ஆம் திகதி நடாத்தப்பட்டதாக கூறப்படும் நிர்வாகத் தெரிவு கட்சியின் யாப்பிற்கு அமைவாக நடாத்தப்படவில்லை.

வழக்கு தாக்கல்

அதன் காரணமாக அது செல்லாது என்பதையும் கட்சியின் யாப்பின் படி தேர்தல்கள் நடைபெறும் வரை கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிக் கிளையின் நிர்வாகமாக 02.12.2023 அன்று தெரிவான உறுப்பினர்கள் தொடர்ந்து செயற்பட எம்மை தேர்ந்தெடுத்த மூலக்கிளை உறுப்பினர்களுக்கும் அத்தெரிவின் போது கலந்து கொண்ட கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் கடமைப்பட்டுள்ளோம்.

 தமிழரசுக்கட்சி தலைமைகளுக்கு பறந்த கடிதம் | Itak Kks Branch Letter To Cvk Sivagnam Sumanthiran

யாப்பை மீறும் செயற்பாடுகள் கட்சிக்குள் மேலும் நெருக்கடியை அதிகரிப்பதுடன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கடிதம் தொடர்பாக சாதகமான பதில் இல்லை எனில் இன்னொரு வழக்கு தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர், பதில் செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வாய்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

Gallery