லஷகர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஹஃபீஸ் சயீத், தனது முக்கிய கமாண்டர்களின் தொடர் மர்ம கொலைகளையடுத்து தற்போது தலைமறைவாகியுள்ளார். “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பின் லஷ்கர் இயக்கம் முழுவதுமாகச் சிதறியுள்ள நிலையில், அதன் தலைவர் ஹஃபீஸ் சயீத் வெளிநடமாட்டத்தை தவிர்த்து அச்ச உணர்வில் வாழ்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ஹஃபீஸ் சயீத், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டு, 166 அப்பாவி இந்தியர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தார்.
இவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக அறிவித்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகள் அளித்த ஆதரவு காரணமாக ஹஃபீஸ் சயீத் பல ஆண்டுகளாக வெளிப்படையாகச் செயல்பட்டு வந்தார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும், லஷ்கர் இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘THE RESISTANT FRONT’ அமைப்பே பொறுப்பேற்றது.
அதற்குப் பழிவாங்கும் வகையில் கடந்த மே மாதம் இந்திய பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கை லஷ்கர் இயக்கத்தைச் சிதறடித்து சின்னாபின்னமாகியது. முசஃபராபாத், கோட்லி, மான்சேரா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. பல கோடி மதிப்பிலான ஆயுத களஞ்சியங்கள், தகவல் மையங்கள். ஆட்சேர்ப்பு முகாம்கள் சிதைவடைந்தன.
அப்போது லஷ்கர் அமைப்பின் பல கமாண்டர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை உளவு அமைப்புகள் உறுதி செய்தன. லஷ்கர் இயக்க முகாம்களைக் குறிவைத்து இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதல்கள், அந்த அமைப்பின் தலைவர் ஹஃபீர் சயீதையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பயங்கரவாத இயக்கங்கள் எங்கிருந்து செயல்பட்டாலும் இந்திய பாதுகாப்பு படைகள், அதனை எல்லைகள் கடந்து தாக்கி அழிக்கும் என்ற செய்தியை இந்த “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கை தெளிவாக உணர்த்தியது. அதன் தொடர்ச்சியாக லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த ஹஃபீஸ் சயீதின் முக்கிய கமாண்டர்கள் சிலர் ஒன்றன் பின் ஒருவராக மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.
கடந்த அக்டோபர் 31-ம் தேதி அவரது நெருங்கிய கமாண்டர்களில் ஒருவரான ஷேக் மோயிஸ் முஜாஹித் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். கசூர் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு வைத்து, ஆயுதங்கள் தாங்கிய அடையாளம் தெரியாத கும்பல் அவரைச் சரமாரியாகச் சுட்டு கொன்றது.
முன்னதாகக் கடந்த மார்ச் 16-ம் தேதி பூஞ்ச் மற்றும் ராஜௌரி தாக்குதல்களில் தொடர்புடைய ஸியா-உர்-ரஹ்மான், மே 7-ம் தேதி லஷ்கர் இயக்கத்தின் தலைமை கமாண்டர் அபூ கட்டால், மே 18-ம் தேதி இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய அபூ சைஃபுல்லா கலீத் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்தத் தாக்குதல்களால் அச்சத்திற்குள்ளான லஷ்கர் தலைவர் ஹஃபீஸ் சயீத், தற்போது வெளி நடமாட்டங்களை தவிர்த்துத் தலைமறைவாகியுள்ளார்.
ஏற்கனவே “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கை ஹஃபீஸ் சயீத் இருப்பிடத்தை கண்டறிந்து அழிப்பது எத்தனை எளிது என்பதை நிரூபித்திருந்த நிலையில், தற்போது அவரது கமாண்டர்களின் மர்ம கொலைகளும் ஹஃபீஸ் சயீதை கலக்கத்திற்குள்ளாக்கியுள்ளது. அதன் காரணமாகவே அவர் தலைமறைவாக வாழும் முடிவை மேற்கொண்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு காலத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இருந்தபடி தன்னை யாரும் நெருங்க முடியாது என்ற மமதையில் இருந்த லஷ்கர் தலைவர் ஹஃபீஸ் சயீத், தற்போது தனது சொந்த நாட்டிலேயே அச்ச உணர்வுடன் உயிருக்குப் பயந்து மறைந்து வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது அவருக்குத் தகுந்த தண்டனையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.











