போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அநுர அரசின் திட்டம்

1 week ago

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (30) காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தேசிய திட்டத்தில், மதத் தலைவர்கள், பொதுப் பாதுகாப்புக் குழுக்களைச் சேர்ந்த குழுக்கள், காவல்துறை மற்றும் முப்படையினர் உறுப்பினர்கள், அத்துடன் சுமார் 50 வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

உறுதிமொழி எடுப்பதற்கு திட்டம்

இலங்கையின் இளம் சமுதாயம் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்வைப் பாதிக்கும் விஷ போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அநுர அரசின் திட்டம் | Island Wide Anti Drug Operation To Commence Today

பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய ஒரு பரந்த பொறிமுறையின் ஊடாக இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், போதைப்பொருட்களின் விநியோகத்தையும் அதற்கான தேவையையும் குறைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், காவல்துறை, முப்படையினர், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட பல அமைப்புகள் இன்று முதல் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படும்.

இந்தத் திட்டத்துடன் இணைந்ததாக, அனைத்து மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரிகள் உறுதிமொழி எடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை 

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான "நாடே ஒன்றுபட்டு - தேசிய நடவடிக்கை" இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதால், அனைவரின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமுதாய வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே (Upali Pannilage) தெரிவித்தார்.

அத்துடன், இந்த தேசியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய செயற்குழு ஒன்றை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டதுடன், அது தற்போது நிறுவப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அநுர அரசின் திட்டம் | Island Wide Anti Drug Operation To Commence Today

இந்தத் தேசிய செயற்குழுவின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்கமும் பொதுமக்களும் இணைந்து இந்த விஷ போதைப்பொருள் ஒழிப்புத் தேசிய நடவடிக்கை திட்டமிடப்படுகிறது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பரந்த பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு பொறிமுறையும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்காக, மாவட்ட செயற்குழுக்கள், பிரதேச செயற்குழுக்கள், மற்றும் கிராமிய மட்டத்தில் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் உள்ளிட்ட கட்டமைப்பை நிறுவுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!