ரஷ்யாவில் இருந்து நேரடியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், வரும் டிசம்பா் மாதத்தில் இருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா அண்மையில் விதித்த தடைகள் நவம்பா் 21 ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.
கச்சா எண்ணெய்
இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதத்துக்கு மேல் ரஷ்யாவில் இருந்துதான் வருகின்றது.
அதே நேரத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை ரஷ்யா பயன்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகின்றாா்.
இறக்குமதிப் பொருள்கள்
இதைக் காரணம் காட்டி இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீது பதிலடி வரியுடன் சோ்த்து மொத்தம் 50 சதவீதம் வரியை கடந்த ஒகஸ்ட் மாதம் ட்ரம்ப் விதித்தாா்.
இருப்பினும், இதையும் மீறி இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் கொள்முதல் செய்து வந்தது.

இந்தநிலையில், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா ஒக்டோபா் 22 இல் பொருளாதாரத் தடை விதித்தது.
இதையடுத்து, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா விரைவில் நிறுத்திக்கொள்ளும் எனவும் மற்றும் படிப்படியாகக் குறைக்கும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகின்றார்.
ரஷ்ய எண்ணெய்
அதே நேரத்தில் அமெரிக்காவுடனான வா்த்தக உறவை சீரமைக்கும் நோக்கில் அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.
இந்தநிலையில், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்த தடை வரும் 21 ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றது.

தடை விதிக்கப்பட்டுள்ள ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துடன் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நீண்டகால கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
இருப்பினும், இனி அந்த நிறுவனத்திடம் இருந்து இறக்குமதியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











