பிரான்ஸ் : அருங்காட்சியகத்தில், போலீஸ் உடை அணிந்த நபர்கள் கைவரிசை!

4 days ago

பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில், விலை உயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில், போலீஸ் உடை அணிந்த நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MONEY HEIST SERIES- நேரில் பார்த்தது போல் இருந்ததாக அருங்காட்சியக ஊழியர்கள் மிரட்சியுடன் தெரிவித்துள்ளனர்.

லியான் நகரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு, காவல்துறையினர் போல வேடமணிந்து வந்த மர்ம நபர்கள், வெடிபொருட்களைக் கொண்டு சுவரைத் தகர்த்து இந்தத் துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டடத்தின் பின்பக்கத்தில் பயங்கர சத்தம் எழுவதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

அப்போது காலாஸ்நிக்கோவ் ரக துப்பாக்கிகளுடன் போலீஸ் உடையில் கொள்ளையர்கள் உள்ளே நுழைவதை பார்த்த ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். வெறும் பத்தே நிமிடங்கள் தான்.

தங்கம் உட்பட ஒட்டுமொத்த விலை உயர்ந்த பொருட்களையும் பைகளில் போட்டுக் கொண்ட கொள்ளையர்கள், கண் இமைக்கும் நேரத்தில் ஜுட் விட்டனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் போலீஸ் வாகனத்தில் வந்திறங்கிய கொள்ளையர்கள், ஏணியை தூக்கி கொண்டு அருங்காட்சியகத்தின் பின்பக்கம் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இதனிடையே, இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ள காவல் துறையினர், மேலும் சிலரை வலைவீசித் தேடி வருகின்றனர்.