பணி அனுமதிக்கான தானியங்கி நீட்டிப்பை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம் : ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதிமாற்றம்!

4 days ago

அமெரிக்காவின் பணி அனுமதி விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள புதிய விதிமாற்றங்கள், ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது தலைமையிலான நிர்வாகம் “அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளைப் பாதுகாப்பது என்ற பெயரில், வெளிநாட்டு பணியாளர்களின் நுழைவு மற்றும் வேலை அனுமதிகளில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கான H-1B விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதுடன், பல மாநிலங்களில் வெளிநாட்டு பணியாளர்களைப் பணியமர்த்த தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது EMPLOYMENT AUTHORISATION DOCUMENT எனப்படும் பணி அனுமதி ஆவணங்களுக்கான தானியங்கி நீட்டிப்பு முறையும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் விரைவில் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

இதற்குத் தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் நலன் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இதனை வெளிநாட்டவர்களின் திறமைகளை ஒதுக்கும் டிரம்பின் அரசியல் நடவடிக்கையாகப் பார்ப்பதாகப் புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்மையில் அமெரிக்க உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், வெளிநாட்டு பணியாளர்கள் அந்நாட்டில் பணியாற்றப் பெற்ற பணி அனுமதி ஆவணங்களின் தானியங்கி நீட்டிப்பு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆவணங்களை உடனடியாகப் புதுப்பித்துப் புதிய அனுமதியை பெறாத பணியாளர்கள், உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை அதிகாரிகள், பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு தானியங்கி நீட்டிப்பை நிறுத்துவது, “தேசிய பாதுகாப்பு” நோக்கில் அவசியமானது என விளக்கமளித்துள்ளனர். முன்னதாக விண்ணப்பங்கள் பரிசீலணையில் இருக்கும் காலகட்டத்திலும், பணியாளர்கள் 540 நாட்கள் வரை தங்கள் பணியைத் தொடர அனுமதி இருந்தது. ஆனால் தற்போதைய விதிமாற்றம் அந்த அனுமதிக்கும் முற்றுப்புள்ளி வைத்திருப்பது, வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகக் கிரீன்கார்டு மற்றும் விசா பிரச்னைகளில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் இந்த மாற்றத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொள்வார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக H-1B விசா வைத்துள்ள பணியாளர்கள், H-4 விசா வைத்துள்ள அவர்களின் துணைவியர்கள், OPT மற்றும் STEM OPT விசாவில் பயிலும் மாணவர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்கள் தங்கள் பணி அனுமதியை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் EAD புதுப்பிப்பு செயல்முறைகள் தற்போது 3 முதல் 12 மாதங்கள்வரை நீள்வதால், அனுமதி முடிவடையும் முன் புதுப்பிப்பு கிடைக்காதவர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அக்டோபர் 30-ம் தேதிக்குள் தானாக நீட்டிக்கப்பட்ட அனுமதிகளுக்கு இந்த விதி பொருந்தாது எனவும், அதற்கு பிந்தைய அனைத்து புதுப்பிப்புகளும் கடுமையான பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் என்றும் அமெரிக்க உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போதைய EAD அனுமதி காலவதியாவதற்கு 180 நாட்களுக்கு முன், புதிப்பிப்பு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், சிலர் முன்கூட்டியே விண்ணப்பித்தாலும் செயல்முறை தாமதம் காரணமாக அவர்கள் இடைக்கால பணி இழப்பைச் சந்திக்கும் வாய்ப்பும் உருவாகலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கிரீன் கார்டு பெற 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்தியர்களுக்கு இந்தப் புதிய விதி கூடுதல் சுமையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், தொழில்நுட்பம், சுகாதாரம், ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் பங்கு வகித்து வரும் இந்திய பணியாளர்கள், இந்தப் புதிய நடைமுறைமூலம், பணி இடர்பாடுகள் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களுக்கிடையே சிக்கி தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.