நாட்டில் தலைதூக்கியுள்ள கொலைக் கலாசாரம் - காவல்துறையினர் அசமந்தம் : சஜித் குற்றச்சாட்டு

1 week ago

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் (Ratnapura) நேற்று (25)  இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ”மக்களை வாழ வைப்பது தான் ஒரு அரசாங்கத்தின் கொள்கையாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாட்டில் கொலைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.

அரசாங்கத்தின் பலவீனம்

இந்த வருடம் மட்டும், அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளமையால், உயிர் இழப்புகளும் காயம் ஏற்படும் நிலையும் அதிகமாக நடந்துள்ளன

 சஜித் குற்றச்சாட்டு | When And Where Will Shootings Occur In Sri Lanka

பொது மக்கள் தின நடவடிக்கைகள் நடைபெற்று வரும் வேளையிலயே உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் கூட கொலை செய்யப்பட்டுள்ளனர். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பொது மக்கள் தினம் நடத்தப்படுகின்றன.

இன்று சமூகத்தில் கொலைகளும் திட்டமிட்ட குற்றச் செயல்களும் வெகுவாகவும் சர்வசாதாரணமாகவும் நடந்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் சரியான வேலைத்திட்டமொன்று இல்லை.

இந்த அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, கொலைகாரர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தவிசாளர் படுகொலை 

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் ஒருவர் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை நடப்பதற்கு முன்னர், தனக்கு உயிராபத்து காணப்படுகிறன்றது, பாதுகாப்பு வழங்குமாறு கோரி, காவல்துறை மா அதிபருக்கு அவர் எழுத்து மூலம் அறிவித்திருக்கிறார். ஆனால் காவல்துறையினர் எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை.

 சஜித் குற்றச்சாட்டு | When And Where Will Shootings Occur In Sri Lanka

இன்று சமூகத்தில் எங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது இருக்கிறது. நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்கவும் முடியாமலுள்ளது.

இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!