சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

12 hours ago

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுப் போர் நடந்துவரும் நிலையில், ஒரு இந்தியரைக் கடத்திய RSF என்னும் துணை ராணுவப் படையினர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடந்து வருகிறது. அரசின் ராணுவப் படையான SAFக்கும் துணை இராணுவப் படையான RSF க்கும் இடையே நடக்கும் கடும் சண்டையில் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

12 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம்பெயரச் செய்துள்ள இந்த உள்நாட்டுப்போர், சுமார் 6.3 மில்லியன் மக்களைப் பஞ்சத்தில் தள்ளியுள்ளது. சூடான் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் சுமார் 30.4 மில்லியன் மக்கள் அடிப்படைத் தேவைக்கே கையேந்தும் நிலையில் உள்ளனர்.

சூடானில் உள்நாட்டுப் போர்  தொடங்கிய உடனேயே மத்திய அரசின் ஆபரேஷன் காவேரி நடவடிக்கையால் 500 இந்தியர்கள் பாதுகாப்பாகச் சூடானில் இருந்து மீட்கப் பட்டுள்ளனர். கிட்டத்தட்ட நாட்டின் மேற்கு பகுதி முழுவதும் துணை ராணுவப்படைப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மற்ற பகுதிகள் அனைத்தும் ராணுவத்தின் வசம் உள்ளது. 18 மாத முற்றுகைக்குப் பிறகு சமீபத்தில் தலைநகர்  கார்ட்டூமில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள அல்-ஃபாஷர் நகரைத் துணை ராணுவப்படையினர்க் கைப்பற்றியுள்ளர்.

ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில்,அந்நகரில் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அல்-ஃபாஷர் நகரில் வேலைப் பார்த்துவந்த இந்தியர் ஒருவரை RSF போராளிகள் கடத்தியுள்ளனர். அங்கிருந்து மீண்டும் அவரை நியாலா என்னும் நகரத்துக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.

இதை உறுதிப்படுத்தியுள்ள இந்தியாவுக்கான சூடான் தூதர் முகமது அப்தல்லா அலி எல்டோம், சிறைபிடிக்கப் பட்ட இந்தியரைப் பாதுகாப்பாக மீட்க இந்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட இந்தியர் ஒடிஷாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான ஆதர்ஷ் பெஹெரா என்று தெரிய வந்துள்ளது. அவரிடம் துணை ராணுவப்படைப் போராளிகள் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில், இரண்டு துணை ராணுவப்படை போராளிகளுக்கு நடுவில் இருக்கும் ஆதர்ஷ் பெஹெரவிடம் ஒரு போராளி உனக்கு ஷாருக்கானைத் தெரியுமா ? என்று கேட்கிறார். மற்றொரு போராளி, துணை ராணுவப்படையின் தலைவரான முகமது ஹம்தான் டகலோ வைப் புகழ்ந்து கோஷம் எழுப்பக் கட்டாயப்படுத்துகிறார்.

ஆதர்ஷ் பெஹெராவுக்கு மனைவி மற்றும் 8 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2022ம் ஆண்டு முதல் சூடானில் உள்ள சுக்ரதி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாக அவரது குடும்பத்தினர்  தெரிவித்துள்ளனர்.

போராளிகள் பிடியில் சிக்கியுள்ள தனது கணவரின் பாதுகாப்பான விடுதலைக்கு உதவுமாறு ஒடிசா அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஆதர்ஷ் பெஹெராவின் மனைவி சுஸ்மிதா கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக ,சூடானில் நிலைமை மோசமாக இருப்பதாகத் தன்னிடம் தனது கணவர்  தெரிவித்ததாகவும் அவர்  கடத்தப்படுவார் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும் சுஸ்மிதா கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆதர்ஷ் பெஹெரா பேசிய இன்னொரு வீடியோவையும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். அதில், கைகளைக் கட்டிக்கொண்டு ஆதர்ஷ் பெஹெரா உதவி கேட்டு முறையிட்டுள்ளார்.

எல்-ஃபாஷரில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளாக மிகுந்த சிரமத்துடன் சூடானில் வசித்து வருவதாகவும், குடும்பத்தினரும் குழந்தைகளும் மிகவும் கவலையில் உள்ளதாகவும் பேசியுள்ள ஆதர்ஷ் பெஹெரா விரைவில் தன்னைக் காப்பாற்றுமாறு மாநில அரசுக்கு உருக்கத்துடன் வேண்டுகோள் வைத்துள்ளார்.