நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி மல்லாந்த சந்தியில் நேற்று(07) பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் வண்டியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணை
காவல்துறையினரின் தகவலின்படி, காயமடைந்த நபர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து இலங்கை சுற்றுலா பயணமாக வந்திருந்த இஸ்ரேலிய பிரஜை ஆவார்.

அவர்கள் வெலிகமவிலிருந்து வாடகைக்கு எடுத்த மூன்று மோட்டார் சைக்கிள்களில் கண்டி மற்றும் நுவரெலியா வழியாக எல்லவுக்கு பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படும் இஸ்ரேலிய பயணியின் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பிரதான வீதியிலிருந்து குறுக்கு வீதியில் திரும்பிய கெப் வண்டியுடன் மோதியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் கடுமையாகக் காயமடைந்த இஸ்ரேலிய பிரஜை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி காவல்துறையினர் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











