குற்றச்செயல்களுடன் தொடர்பிருப்பதால் பாதுகாப்பு கோரும் எதிரணியினர் : அரச தரப்பு அறிவிப்பு

1 day ago

Courtesy: கபில்

போதைப்பொருள் மாபியாக்களோடும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களோடும் தொடர்பு ஏதும் இருப்பதாலேயே பாதுகாப்பும் ஆயுதமும் கோரும் நிலையில் எதிரணியினர் உள்ளனர் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் (M.Jegatheeswaran) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “போதைப்பொருள் மற்றும் ஒருங்கினைந்த குற்றச் செயல்கள் பற்றி தற்போது இலங்கையில் முக்கிய பேசுபொருளாக உளளது.

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

உண்மையிலே இந்த இரண்டும் ஒரு நாட்டுக்கு பெரும் சவாலை விடுகின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது. அதனாலே எங்களுடைய அரசாங்கம் இதற்கான தீர்க்கமான முடிவினை மேற்கொண்டிருக்கின்றது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த 30ம் திகதி ஜனாதிபதி தலைமையிலே சுகததாச உள்ளரங்கிலே இதனை தடுப்பதற்கான செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

 அரச தரப்பு அறிவிப்பு | Opposition Mps Links To Criminal Activities Npp

தற்போது இலங்கையை பொறுத்தவரை போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் பரிமாற்றம் போன்ற விடயங்கள் மிகவும் முக்கியத்துவமாக காணப்படுகின்றன.

ஆரம்பத்திலே இலங்கையிலே கணிசமான அளவிலே போதைபொருள் பாவிக்கக்கூடிய நபர்கள் இருக்கின்ற ஒரு தேசமாக இருந்தது. அதன் பிற்பாடு இலங்கையை போதைப்பொருள் பரிமாற்ற நிலையமாகவும் போதைப்பொருள் மாபியாக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

தற்பொழுது அதுக்கு மேலாக சென்று போதைப்பொருளை உற்பத்தி செய்கின்ற அளவுக்கு மிக மோசமான நிலையிலே எங்களுடைய நாடு தள்ளப்பட்டுள்ளது.

உண்மையிலே இந்த போதைப்பொருள் மாபியாக்கள் கடந்த கால அரசாங்கங்களினாலும், அரசியல்வாதிகளிலாலும் அரவணைக்கப்பட்டு அவர்களுடைய வழிநடத்தலிலும், அவர்களுடைய ஒத்துழைப்பின் பலனாகவே எமது நாடு பாரதூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியிலே நாங்கள் இந்த போதைப்பொருளை ஒழிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்திருக்கிறோம். நிச்சயமாக எங்களுடைய காலப்பகுதியிலே விரைவாக நாட்டிலிருந்து போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

இருள்மயமான சூழலில் தள்ளுதல்

அது மட்டுமல்லாமல் அண்மையில் பாவிக்கப்படுகின்ற போதைப்பொருளே மிகுந்த மோசமான நிலையில் உள்ளதுடன் அதனை பாவித்தவர்களை இனம் காண முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. அவர்கள் சாதாரண மனிதர்களைப் போல் நடமாடுகிறார்கள்.

குறித்த விடயமானது மிகவும் சவாலானதாகவும், பாரதூரமானதாகவும் இருக்கின்றது. குறிப்பாக போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருள் வியாபாரிகள் எங்களுடைய பாடசாலை சிறுவர்கள், கல்வி சமூகங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களையே அவர்களின் இலக்காக கொண்டு தங்களுடைய வியாபாரங்களை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.

 அரச தரப்பு அறிவிப்பு | Opposition Mps Links To Criminal Activities Npp

இதனால் எதிர்கால இலங்கையை ஒரு இருள்மயமான சூழலில் தள்ளுவதற்கான இவர்களுடைய இந்த முயற்சி நிச்சயமாக பயனளிக்கப் போவதில்லை. எங்களுடைய அரசாங்கமும் நாங்களும் உறுதியாக இருப்பதோடு இந்த போதைப்பொருள் மாபியாக்களை ஒழித்து கட்டுவதற்கு எமது நாட்டு மக்களினுடைய பூரண ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

மேலும் இவ்வேலைத்திட்டத்திற்கு அனைத்து திணைக்களங்களும் ஒருமித்து செயற்படுவதற்கு இணைந்துள்ளதுடன், நாங்கள் எமது பொதுமக்களுக்கும் ஏனைய எதிர்க்கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம், எங்களோடு சேர்ந்து இந்த புனிதமான செயற்பாட்டுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் 2009ம் ஆண்டு யுத்தத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் இப்படியான நிலைப்பாடு காணப்படவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் வந்த அரசாங்கங்கள் திட்டமிட்ட வகையிலே வடக்கு மாகாணத்தின் எதிர்கால சந்ததியினை அழிக்கும் நோக்குடன் திட்டமிட்ட வகையிலே இந்த போதைப்பொருளை எங்களது பிரதேசங்களுக்கு கொண்டு வந்திருக்கின்றார்கள்.

நிச்சயமாக நாங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே நிச்சயமாக இதற்கு எதிராக முழுமூச்சாக செயல்படுவோம். அந்த வகையிலே எமது எதிர்கால சந்ததியினை ஆரோக்கியமானதாகவும் பலமான சந்ததியினராகவும் உருவாக்க வேண்டிய பொறுப்பை நாங்கள் ஏற்றிருக்கின்றோம். நிச்சயமாக அந்த பணியை நாங்கள் நிறைவேற்றியே தீருவோம்.

பாதுகாப்பு கோரும் எதிர்க்கட்சியினர்

அத்தோடு சேர்ந்து ஒருங்கிணைந்த குற்றச் செயல்களும் பாரிய ஒரு பிரச்சினைக்குரிய விடயமாகவும், சவாலான விடயமாகவும் நாட்டின் சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த சவாலாக இருக்கின்றன.

குறிப்பாக ஆயுத கலாசாரம் மேலோங்கி இருக்கின்றது. இவற்றையும் நாங்கள் படிப்படியாக கட்டுப்படுத்தி வந்து கொண்டிருக்கின்றோம். அது வடக்கு வரை வியாபித்து இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

 அரச தரப்பு அறிவிப்பு | Opposition Mps Links To Criminal Activities Npp

நிச்சயமாக அதில் நாங்கள் எங்களுடைய கவனத்தை செலுத்த இருக்கின்றோம். உண்மையிலேயே இது ஒரு வேடிக்கையான விடயமாகும். போதைப்பொருள் அல்லது குற்றச் செயல்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

குறிப்பாக இச்செயற்திட்டத்தில் ஜனாதிபதி, ஆளும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் இதற்கு முழுமையாக நின்று செயல்படுகின்றார்கள். இதன்படி எங்களுக்கு தான் பாதுகாப்பு தேவையாகும். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது எங்களது பாதுகாப்பு எங்களது மக்களாகும்.

நிச்சயமாக எங்களுக்கு எங்களது மக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எதிர்க்கட்சியினர் ஏனோ தங்களுக்கு ஆயுதம் வேண்டும் என்று கூறுகிறார்கள் அல்லது துப்பாக்கி வேண்டும் என்று கூறுகிறார்கள் அல்லது பாதுகாப்பு வேண்டும் என்று கூறுகிறார்கள் என்பது வினோதமான விடயமாக இருக்கின்றது.

நான் நினைக்கின்றேன் போதைப்பொருள் மாபியாக்களோடும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களோடும் தொடர்பு ஏதும் இருக்கின்றதோ தெரியவில்லை. நிச்சயமாக அவ்வாறு இருக்கின்ற பட்சத்தில் அவர்கள் காட்டிக் கொடுக்கப்படலாம் அல்லது ஏதோ ஒரு கட்டத்தில் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நோக்கிலே அவ்வாறு கேட்டிருக்கலாம், அவ்வாறு அவர்கள் கேட்டிருந்தால் நியாயமானதே“ என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!