கடன் செயலி, கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சீன நாட்டினர் ஆதிக்கம் – அமலாக்கத்துறை

5 days ago

கடன் செயலி மற்றும் கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சீன நாட்டினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக LoanPro, FastCredit, SmartRupee உள்ளிட்ட கடன் செயலிகளை விசாரித்து வந்ததாகவும், அதில், சட்டவிரோத கடன் செயலிகளை சீன நாட்டினர் கட்டுப்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டினரின் கடன் செயலி மூலம் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியபோது, கடன் செயலி ஊழியர்களால் மிரட்டப்பட்டதில் சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மொத்த கடன் தொகையில் 30 முதல் 40 சதவீதம் வரை கூடுதல் கட்டணங்களை சட்டவிரோத செயலிகள் வசூலித்தது கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடன் செயலிகளை சீன நாட்டினர் கட்டுப்படுத்தினாலும், மறைமுகாகச் செயல்பட்ட இந்தியா கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.