உலகத்தை 150 முறை அழிக்க, போதுமான அணுஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுக்கு அமெரிக்கா தான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் மீண்டும் அணு ஆயுதப் போருக்குத் தயாராகிறாரா ? சீனா-அமெரிக்க வர்த்தகப் போர் அணு ஆயுதப் போராக மாறுமா? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளாகச் சீனாவும் அமெரிக்காவும் உள்ளன. பல ஆண்டுகளாகவே இந்த இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடர்ந்து வருகிறது. இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின், சீனா மீது கடுமையான வர்த்தகப் போரைத் தீவிரமாக்கியுள்ளார்.
சீனா மீது அமெரிக்கா அதிக வரிகள் விதித்த நிலையிலும், அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் சீனா-அமெரிக்க வர்த்தகம் சுமார் 659 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது 2023 ஆம் ஆண்டை விட அதிகம்.
அண்மையில், தனது ஆசிய பயணத்தை மேற்கொண்ட அமெரிக்க அதிபர், 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத் தென்கொரியாவில் சந்தித்து நேருக்கு நேர்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னதாக, மீண்டும் அணு ஆயுதச் சோதனையைத் தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில், மீண்டும் தனது அணுஆயுதசோதனைக் கருத்தை ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் ரஷ்யா தங்கள் புதிய அணு ஆயுதங்களைச் சோதனைச் செய்துள்ளது என்றும், சீனாவும், வடகொரியாவும் தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாகவும் கூறியுள்ள அதிபர் ட்ரம்ப், 33 ஆண்டுகளாக அணு ஆயுதச் சோதனை செய்யாத ஒரே நாடு அமெரிக்கா தான் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இனி அமெரிக்கா அப்படி இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
உலகை 150 முறை அழிக்கும் அளவுக்கு வேறு எந்த நாட்டையும் விடவும் அதிக அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும், ஆனாலும் அணு ஆயுதக் குறைப்பு குறித்து , ரஷ்ய அதிபர் புதினுடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனும் விவாதித்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சீன ஹேக்கர்கள் அமெரிக்க மின் உள்கட்டமைப்பு மற்றும் நீர் அமைப்புகளில் ஊடுருவி, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுவதாகவும், அமெரிக்க அறிவுசார் சொத்து மற்றும் அமெரிக்கர்களின் தனிப்பட்ட தரவுகளைச் சீனா திருடி வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை குற்றச்சாட்டி வருகிறது.
இதற்கு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் வகையில் சீனா எப்போதும் அமெரிக்காவைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.மேலும் அமெரிக்காவும் சீனாவைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், சீனாவை விட அமெரிக்கா எல்லாத் துறைகளிலும் சிறந்தவர்களாகவும், வலிமையானவர்களாகவும் இருக்க முடியும் என்று நம்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆண்ட்ராய்டு போன் தொடங்கி பாதுகாப்புதுறையில் நவீன ஆயுதங்கள் வரை அனைத்துக்கும் அவசியமான அரியவகை மண் தூதுக்கள் சீனாவிடம் மட்டுமே உள்ளது. உலகின் 99 சதவீத அரியவகை மண் தாதுக்களைக் கட்டுப்படுத்தும் சீனாவைத் தான் அமெரிக்கா நம்பியுள்ளது.
அரிய வகைத் தாதுக்கள் ஏற்றுமதிக்குச் சீனா கட்டுப்பாடுகள் விதித்த காரணத்தால், சீனாவுக்கான போயிங் விமானத்தின் உதிரி பாகங்களை அமெரிக்கா நிறுத்தியதாகவும் அதிபர் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்கா நடத்தும் அணு ஆயுதச் சோதனையில், அணு வெடிப்புகள் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ள அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட், புதிய மாற்று அணு ஆயுதங்கள் முந்தைய ஆயுதங்களை விடவும் விட சிறந்தவை இருக்கும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையே இருந்துவரும் நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். சீனா மீதான வரியை 10 சதவீதம் குறைப்பதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாகச் சீனா அறிவித்தது.
வர்த்தகமும், வரியும் இருநாடுகளுக்குமான முக்கிய பிரச்னை இல்லை என்பதை இருநாட்டின் அதிபர்களும் அறிவார்கள் என்றும், தங்கள் நிலைப்பாடுகளை மாற்றாமல், கால அவகாசம் பெற்றுக்கொள்ளவே, ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக இருப்பதாகக் காட்டுகிறார்கள் என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.











