இங்கிலாந்தில் ரயிலில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், அதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எதனால் இந்தக் கொலைவெறி தாக்குதல்… பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அருகே ரயில் பயணிகள் 10 பேர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 9 பேர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேம்பிரிட்ஜ் அருகே ஹண்டிங்டனுக்கு செல்லும் ரயிலில் பயணித்தவர்கள் மீது இந்தக் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் பெரிய கத்தியை வைத்து இருந்தார் என்றும் எங்கே பார்த்தாலும் ரத்தம் தெறித்திருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கத்திக்குத்து சம்பவத்தை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் கண்டித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ஹண்டிங்டன் அருகே ரயிலில் நடந்த கொடூரமான சம்பவம் மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் போலீசாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் எனக் கீர் ஸ்டார்மர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், கேம்பிரிஜ்ஷாயர் பகுதியில் ரயிலில் நேர்ந்த கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாத சம்பவம் அல்ல என்று அந்நாட்டுக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கைதான நபர்கள் இருவரும் பிரிட்டனை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.











