தேசிய மக்கள் சக்தியின் ஹோமாகம பிரதேச சபையின் தலைவர் கசுன் ரத்நாயக்கவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் மூலம் ஹோமாகம தலைமையக காவல்துறையில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 27 ஆம் திகதி தனது அலுவலகத்தில் பொது மக்கள் தினத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, மதியம் 12:30 மணியளவில் பிரதேச சபையின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்ததுக்கு குறித்த கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
"ஹந்தயா" என்று தன்னை அறிமுகப்படுத்தி அழைப்பை மேற்கொண்ட நபர், "சனாவுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று கூறி நேரடியாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தலைவர் தனது முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குமூலம் பதிவு
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக பிரதேச சபைத் தலைவர் மற்றும் செயலாளரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மிரட்டல் அழைப்பு இணைய அழைப்பு அல்ல, மாறாக நாட்டில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்ணிலிருந்து பெறப்பட்டது என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணில் விரிவான பகுப்பாய்வு அறிக்கை அழைக்கப்படும் என்றும் அதன் அடிப்படையில் மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











