அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மலையகத்தில் ஏற்படுத்திய தாக்கம் !

6 days ago

1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள்
மலையக அரசியல் வரலாற்றில் என்றும் மறவாத மாமனிதராக திகழ்கின்றார்.

இலங்கைவாழ் இந்தியர்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் 1936 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.

தோட்ட தொழிலார்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த அன்னார் மலையகத்தின் மாமனிதராக இன்று வரை போற்றப்படுகின்றார்.

மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இயற்கை எய்தினார். தனது 89வது வயதில் இயற்கை எய்தும் போது அன்னார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும், இலங்கை அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களுடைய வாழ்வியலில் பின்னிப் பினைந்த நாமமே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடைய நாமம் ஆகும். அன்னாரை, மலையக அரசியலில் பிதாமகன் என்று புகழாரம் சூடாதவர்கள் எவரும் இல்லை.

1947 ஆம் ஆண்டு பிரஜா உரிமை சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து மலையக மக்களுடைய வீட்டுரிமை, நாட்டுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போது 1952 ஆம் ஆண்டுகளிலே பல்வேறு சத்தியாகிரகங்களையும், போராட்டங்களையும் செய்து மலையக மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்த பெருந்தகையே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார்.

1987 ஆம் ஆண்டு விசேட சட்டமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து சத்திய கடதாசியை சமர்ப்பித்து பிரஜா உரிமை, வாக்குரிமை, நாட்டுரிமை என்பவற்றை பெற்றுக்கொடுத்து இன்றும் எம் மக்கள் வாக்களித்து பல அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கும், மாகாண சபைகளுக்கும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அனுப்புகின்றார்கள் என்றால் அதற்கு காரணமானர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களே.

ஏழைப்பாட்டாளி வர்க்கத்தினரின் நலனை கட்டியெழுப்புவதிலும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தனது முழுக் கவணத்தையும் செலுத்தி அரும்பணி ஆற்றிவந்தவ செயல் வீரர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் இந்நாட்டு மக்களை பொருத்தவரையில் மறக்க முடியாத செயல் வீரராகவே போற்றப்பட்டிருந்தார்.

தொழிலாளர் வர்க்கத்தினரின் மேம்பாட்டைப் பொருத்தவரை உலகளாவிய மட்டத்தில் அவர்களின் எதிர்ப்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் தெரியப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர். சகல வசதிகளும் கொண்டிருந்த இவர் உண்மையில் விரும்பியிருந்தால் சுகபோக வாழ்க்கையில் தனது காலத்தைக் கழித்திருக்கலாம். ஆனால் அப்படியிருக்க அவர் விரும்பவில்லை. ஏழைத் தோட்டத் தொழிலாளர்களின் அடிமைத்தனத்தை அறுத்தெரிந்து தோட்டக் கூலிகள் என்ற இழிநிலையில் இருந்து அவர்களை மனிதாபிமானமுள்ள பிரஜைகளாக வாழ வழிவகுத்துக் கொடுத்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார்.

அன்று வாழ வழித்தெரியாது தவித்து நின்ற மனிதர் கூட்டத்தில் தனிப்பெருந் தலைவனாக உருவெடுத்து, அவர்களின் நலனைக் காக்கும் நல்லாசானாக நின்று வழிக்காட்டியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் என்றால் அது மிகையாகாது. அவர்களுக்கு புத்துயிரூட்டியதுமல்லாமல் தன்னம்பிக்கையுடன் கடமையாற்ற சக்திகொடுத்திருந்தார்.

blank

தோட்டத் தொழிலாளர்களின் அந்தஸ்த்தை உயர்த்தும் ஆக்கப்பணியில் ஈடுபட்ட சௌமியமூர்த்தி தொண்டமான் சர்வதேச ரீதியில் அனைத்து தொழிலாளர்களையும் ஒரு குடையின் கீழ் அணித்திரட்ட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தார். இதன் விளைவாக சர்வதேச தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் முதலாவது உறுப்பினராகச் சேர்ந்துக்கொள்ள வாய்ப்பேற்பட்டது. இதற்கு வித்திட்ட வித்தகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார்.

இதுமட்டுமல்லாமல், இலங்கைத் தொழிலாளரின் பேராளராக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் சர்வதேச தொழில் மாநாடுகளில் பங்குப்பற்றி அளப்பரிய பங்களிப்புச் செய்துள்ளார். தொழிலாளர் வர்க்கத்தின் பேச்சாளர் என்ற முறையில் சர்வதேச ரீதியில் கீர்த்தியும் புகழும் வாய்க்கப்பெற்ற இவர் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுக் கௌரவிக்கப்பட்டிருந்தார் என்று குறிப்பிட்டாக வேண்டும்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் தூரநோக்கு கருத்துக்களில் ஒன்றான, “…..எமது வருங்காலச் சந்ததியினர் சமாதானமாகவும் சகோதரத்துடனும் வாழ வழிவகுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் ஆளும் கட்சியினரும் இந்நாட்டு மக்களும் நடந்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். இந்த இலக்கை எய்தும் நோக்குடன் நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும். இதுதான் சுமூக உறவுமுறைக்கான ஒரேவழி…..”

Related