மன்னார் கடல் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்களுக்கான ஏலங்களை கோரும் பணியாக அடுத்த மாத முதல் வாரத்தில் சர்வதேச கேள்வி விலைமனுக் கோரல்களை திறக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மேல்நிலை பெட்ரோலிய மேம்பாட்டிற்கான சர்வதேச ஏல செயல்முறையை நிர்வகிக்க நிபுணத்துவம் பெற்ற ஆலோசனை நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க அரசாங்கம் கேள்வி விலைமனுக் கோரல்களை அழைத்தது.
இருப்பினும், மன்னார் கடல் படுகையில் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காக, புதிய ஆலோசகரை நியமித்தாலும் இல்லாவிட்டாலும், புதிய கேள்வி விலை மனுக்கோரலை அரசாங்கம் கோரும் என்று இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, உலகம் முழுவதிலுமிருந்து பன்னாட்டு மற்றும் தேசிய எண்ணெய் நிறுவனங்கள் இந்த கேள்வி மனுக்கோரல் செயல்பாட்டில் பங்கேற்கும் என்றும், இது நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை திறந்திருக்கும் என்றும் கூறினார்.
நாடாளுமன்ற ஊடகப் பிரிவு வெளியிட்ட 2021 செய்திக்குறிப்பின்படி, மன்னார் கடல் படுகைப் பகுதியில் சுமார் 267 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.











