கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும் முன்னிலையாகி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மே இந்தச் சந்தேகநபரான சட்டத்தரணிக்கு லட்சக்கணக்கான பணத்தை கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த சட்டத்தரணி நதுன் சிந்தக என்ற பிரபல பாதாள உலக குற்றவாளியான ஹரக் கட்டா, மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டபோது, அவரின் சார்பாகவும் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.
சட்டத்தரணியின் வங்கி கணக்குகள்
இதன் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த சட்டத்தரணியின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

சந்தேகநபரான சட்டத்தரணி கடந்த ஜூன் மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சிங்கப்பூர் வழியாக துபாய் சென்று திரும்பியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் அவ்வப்போது வாடகைக்கு வீடுகளைப் பெற்று தனது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது
குறித்த பெண் சட்டத்தரணி கடந்த (28) கடவத்தை பகுதியில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குற்றவாளியான கெஹெல்பத்த பத்மெ மற்றும் இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில் குறித்த பெண் சட்டத்தரணி இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, துப்பாக்கியை மறைக்க இரண்டு சட்ட குறிப்பு புத்தகங்களை சந்தேகநபர் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!











