இஸ்தான்புல்லில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை என்றால் அது இருநாடுகளுக்கும் இடையேயான முழுமையான போருக்கு வழி வகுக்கும் என்று கடந்த வாரம் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்கவாஜா ஆசிஃப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை எந்த உடன்படும் ஏற்படாமல் முறிந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே முழுப் போர் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2021ஆம் ஆண்டு ஆப்கானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியதும் தலிபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அப்போதிலிருந்தே பாகிஸ்தானுக்கும் ஆப்கான் அரசுக்கும் இடையேயான உறவு மோசமடைய தொடங்கியது.
கடந்த 4 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் வீரர்களைக் கொன்ற பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஆப்கான் அடைக்கலம் கொடுக்கிறது என்று பாகிஸ்தான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. பாகிஸ்தான் தலிபான் என்று அழைக்கப்படும் டிடிபி (TTP) அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசைப் பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.
நீண்ட காலமாகவே இருந்து வந்த இந்தப் பிரச்சனை கடந்த டிசம்பரில் இருந்து மேலும் அதிகரித்தது. கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி, TTP நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டனர்.
உடனே ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதர் காபூலுக்குச் சென்று மூத்த தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதே நேரத்தில் டிசம்பர் 24ம் தேதி, ஆப்கானில் உள்ள TTP பயிற்சி முகாம்கள்மீது பாகிஸ்தான் வான் வழி தாக்குதலை நடத்தியதில் பல பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இதற்குப் பிறகு இருநாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு மேலும் மோசமடைந்தது. தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் மீதான தாக்குதலை TTP தீவிரப்படுத்தியது. கடந்த அக்டோபர் 8ம் தேதி, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், அரசும் ராணுவமும் பொறுமை இழந்து விட்டதாகப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், TTP பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் அதன் விளைவுகளை விரைவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து, அக்டோபர் 9ம் தேதி காபூலில் பாகிஸ்தான் எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் மோதல்கள் வெடித்தன. ஆப்கான் ராணுவம் கொடுத்த பதிலடியில், 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
20 மேற்பட்ட எல்லைச் சாவடிகளை ஆப்கான் இராணுவம் கைப்பற்றியது. தலிபான்களின் தாக்குதலைத் தாங்க முடியாத பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்தது. பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க ஆப்கான் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. இதனையடுத்து, தோஹாவில் இருநாட்டு பிரதிநிதிகளும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருநாடுகளுக்கும் இடையேயான போர்நிறுத்தத்தை நீண்ட காலத்துக்கு நடைமுறைபடுத்துவதற்கான ஒரு திட்டம் வகுப்பதை நோக்கமாகக் கொண்டு, துருக்கியின் இஸ்தான்புல்லில் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. துருக்கி உளவுத்துறை அமைப்பின் தலைவர் இப்ராஹிம் கலின், இந்தப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் மீது அனுதாபம் கொண்ட நாடாக இருப்பதால், நெருக்கடி மற்றும் வன்முறையிலிருந்து பாகிஸ்தானைக் காப்பாற்றவே துருக்கி இந்தப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.
ஆப்கான் தலிபான்கள் போர் நிறுத்தத்துக்கான ஒத்துழைப்பை உறுதி செய்த நிலையில், பாகிஸ்தான் எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களையும் போதுமான பாதுகாப்பு நெறிமுறைகளையும் வகுக்கக் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தலிபான் குறித்த பாகிஸ்தான் கூறிய குற்றசாட்டுக்கு, அது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினை என்று கூறிய ஆப்கான் தலிபான்கள், பாகிஸ்தானின் நியாயமற்ற மற்றும் அறிவற்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், பாகிஸ்தானுக்குள் சில பகுதிகளை TTP தலிபான்களிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்ட பாகிஸ்தான், அந்தப் பகுதிகளில் பாகிஸ்தான் தலிபான்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தைச் செலுத்திக் கொள்ளலாம் என்றும் உறுதியளித்துள்ளது.
எந்தப் பயங்கரவாத நடவடிக்கைக்கும் தங்கள் நிலத்தில் இடமில்லை என்று உறுதிப்படுத்திய ஆப்கான் தலிபான்கள், ஆப்கானுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் அமெரிக்க ட்ரோன்களுக்கு பாகிஸ்தானும் தங்கள் வான் வெளியில் பறக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்தக் கோரிக்கையைப் பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, பேச்சுவார்த்தைகளின் போது, ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியில் உள்ள ‘காபூல் குழு’ மற்றும் ‘காந்தஹார் குழு’ ஆகிய இரு பிரிவுகளுக்கும் இடையே பல விஷயங்களில் முரண்பாடுகள் இருந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாட்கள் நடந்த பேச்சுவார்த்தை எந்த முடிவும் இல்லாமல் முடிவடைந்துள்ளது.
எந்தப் பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லாமல் பேச்சுவார்த்தை முறிந்துள்ளது. அதனால், தாலிபான்களின் தாக்குதல் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்குள் சுமார் 35,000 பாகிஸ்தான் தலிபான்கள் உள்ளனர்.அவர்களைக் கட்டுப் படுத்த தவறிய பாகிஸ்தான் இராணுவத்தின் தவறால், பாகிஸ்தான் தலிபான்களைச் சமாளிக்க முடியாத இக்கட்டில் உள்ளனர். விரைவில் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.











