கைது செய்யப்பட்ட சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!

13 hours ago

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், சந்தேகநபர் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் சரித ரத்வத்தே ஒரு சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.

2015 ஆம் ஆண்டில் நிலையான கொள்முதல் நடைமுறைகளை மீறி 50 தற்காலிக கிடங்குகளை வாங்கியது தொடர்பான விசாரணை தொடர்பாக இந்த கைது நடந்துள்ளது.

இந்த தற்காலிக கிடங்கு இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூலம் ரூ.90 மில்லியனுக்கும் அதிகமான செலவில் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.