எதிர்க்கட்சிகளிலுள்ள அனைவருக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ”நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு (Jagath Vithana) முன்கூட்டியே தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தகவல் கிடைத்திருக்காவிட்டால் இன்று அவர் உயிருடன் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே.
வெலிகம பிரதேசசபைத் தலைவர்
அவரைப் போன்று எதிர்க்கட்சிகளிலுள்ள அனைவருக்கும் இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அரசாங்கத்தினுள் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

வெலிகம பிரதேசசபைத் தலைவர் தனக்கான பாதுகாப்பை எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக கோரியிருந்த போதிலும், அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இறுதியாக அவரது உயிர் பறிபோனது.
துப்பாக்கிச்சூடுகளால் மாத்திரமின்றி, மர்மமான முறையிலும் ஒவ்வொரு நாளும் பல மரணங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால் காவல்துறை அரசியல்மயப்படுத்தப்படுவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர்
காவல்துறைமா அதிபர் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளரைப் போன்று ஊடகவியலாளர் மாநாடுகளில் கருத்துக்களை வெளியிடுகின்றார். அவர் இந்நாட்டின் காவல்துறைமா அதிபராவார். மாறாக அரசாங்கத்தின் காவல்துறைமா அதிபரல்ல.

ஜகத் விதானவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்து ஒரு மாதம் கடந்தும் அரசாங்கத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதாள உலகக் குழுக்களை அழிப்பதாகக் கூறி, அதன் ஊடாக எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கான முயற்சிகளையே அரசாங்கம் முன்னெடுக்கிறது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!











