இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை (04) புதுடில்லியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில்,

“இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்தியா மற்றும் இலங்கை இரு நாட்டு உறவுகள் மற்றும் எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை தொடர்பில் கலந்துரையாடினோம். இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும்,” என பதிவிட்டுள்ளார்.

இந்திய உலக விவகார சபையின் (ICWA) ஏற்பாட்டில் சப்ரு ஹவுஸில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில்  சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

அங்கு நீண்டகாலமாக நிலவும் மீனவர் பிரச்சினை உட்பட இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் தொடர்பில் உரையாற்றினார்.