இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்காக உரிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் அமெரிக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் கடல் பாலூட்டிகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் பாலூட்டி இனங்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளிடமிருந்து பாலூட்டிகளை பாதுகாக்கும் சான்றிதழ்களை பெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் இலங்கை குறித்த சான்றிதழை வழங்குவதற்கு தாமதித்ததன் காரணமாக இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதியை எதிர்வரும் தை மாதம் முதலாம் திகதி முதல் நிறுத்துவதற்கு அமெரிக்கா முன்னர் தீர்மானித்திருந்தது.
அந்நிலையில், இலங்கை நண்டு ஏற்றுமதி தொடர்பில் அமெரிக்க மற்றும் இலங்கை இராஜதந்திர உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதை அடுத்து , சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையால் , எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் வழமை போன்று நண்டு ஏற்றுமதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு மாத கால பகுதிக்குள் தேவையான ஆவணங்களை வழங்க முடியும் என்பதனால் , தொடர்ந்தும் நண்டு ஏற்றுமதி தடையின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கான நீல நண்டு ஏற்றுமதியில் வட மாகாணம் முன்னிலை வகிக்கிறது. குறித்த ஏற்றுமதி மூலம் மாதம் 1 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை இலங்கை பெறுகிறது.
வடக்கில் மன்னாரில் இருந்து நெடுந்தீவு வரையான கடற் பகுதி வருடம் முழுவதும் நண்டு தொழில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இங்கிருந்தே அதிகளவிலான நண்டுகள் அமெரிக்காவுக்கு ஆறு கிழமைகளுக்கு ஒரு தடவை ஏற்றுமதி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.












