இப்படி கவுத்துட்டியே குமாரு…! “சிப்ஸ் பாக்கெட்டை துப்பாக்கி என சொன்ன ஏஐ”… 16 வயது மாணவனை முற்றுகையிட்ட போலீஸ்… கடைசியில் இப்படி ஆகிட்டே..!!

1 week ago

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் நடந்த வினோதமான சம்பவம் தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. டோரிடோஸ் சிப்ஸ் பையை ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பு அமைப்பு “துப்பாக்கி” என தவறாக அடையாளம் கண்டதால், ஒரு பள்ளி மாணவன் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிக்கைகளின்படி, பால்டிமோர் கவுண்டியில் உள்ள கென்வுட் உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்கு வெளியே, டாக்கி ஆலன் எனும் மாணவர் திங்கள்கிழமை இரவு தனது நண்பர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பள்ளியில் நிறுவப்பட்டிருந்த ஆம்னிலேர்ட் (Omnilert) என்ற AI-இயங்கும் பாதுகாப்பு அமைப்பு, அவரது கையில் இருந்த சிப்ஸ் பையை துப்பாக்கி என தவறாக அடையாளம் கண்டு “அச்சுறுத்தல் எச்சரிக்கை” அனுப்பியது.

அந்த எச்சரிக்கையைப் பெற்ற போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, துப்பாக்கிகளை சுட்டபடி ஆலனை தரையில் படுக்க உத்தரவிட்டனர். அதிர்ச்சியடைந்த ஆலன், “என்ன நடந்தது எனக்குத் தெரியவில்லை; திடீரென அவர்கள் துப்பாக்கியுடன் என்னை நோக்கி வந்தார்கள்,” என்று பின்னர் கூறியுள்ளார்.

சோதனையின் பின்னர் எந்த ஆயுதமும் ஆலனிடம் கிடைக்கவில்லை. சம்பவத்தின் வீடியோ காட்சிகளைப் பார்த்தபோது, AI அமைப்புக்கு “துப்பாக்கி” போல தோன்றிய பொருள் உண்மையில் டோரிடோஸ் சிப்ஸ் பை என்பது உறுதியாகியது.

“நான் சிப்ஸ் பையை பிடித்திருந்தேன்; இரண்டு விரல்கள் வெளியில் இருந்ததால், அது துப்பாக்கி போல் தோன்றியிருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள்,” என ஆலன் நகைச்சுவையாக கூறினார்.

சம்பவம் பரவலாக விமர்சனத்தை ஏற்படுத்தியதையடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவரிடம் மன்னிப்பு கேட்டது. “இது மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதை நாங்கள் உணர்கிறோம்,” என்று பள்ளி வெளியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளது.

AI அமைப்பை உருவாக்கிய ஆம்னிலெர்ட் நிறுவனம் கூட வருத்தம் தெரிவித்துள்ளது. “இந்த தவறால் பாதிக்கப்பட்ட மாணவருக்கும் சமூகத்திற்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம்,” என்று நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம், பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் AI கண்காணிப்பு அமைப்புகள் தவறான எச்சரிக்கைகளை உருவாக்கும் அபாயம் குறித்த சர்வதேச அளவிலான விவாதத்தை எழுப்பியுள்ளது.