அநுர அரசிற்கு எதிரான பேரணி : பின்னடிக்கும் சஜித் தரப்பு ... மொட்டுக்கட்சி எச்சரிக்கை

6 days ago

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசுக்கு எதிரான பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டால் அது அந்தக் கட்சிக்கே அரசியல் ரீதியில் பெரும் பின்னடைவாக அமையும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன  (SLPP) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் கூட்டம் மற்றும் எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு முக்கியமான சில எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அந்தவகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் சிறிலங்கா மகாஜன கட்சி என்பன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியை எச்சரித்துள்ளார்

எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்தப் பேரணியில் பங்கேற்காதிருக்கத் தீர்மானித்தள்ள நிலையிலேயே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன (Sanjeeva Edirimanna), ஐக்கிய மக்கள் சக்தியை இவ்வாறு எச்சரித்துள்ளார்.

 பின்னடிக்கும் சஜித் தரப்பு ... மொட்டுக்கட்சி எச்சரிக்கை | Rally Against Anura Govt Sajith S Party Left Slpp

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரச எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது. அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம்.

எனினும், பிரதான எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை அந்தக் கட்சி நிறைவேற்றும் என நம்புகின்றோம். நுகேகொடை கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்கும் என நம்புகின்றோம். இன்னும் காலம் உள்ளது. சில வேளை பங்கேற்காவிட்டால் அது அந்தக் கட்சிக்கே பெரும் பாதகமாக அமையக்கூடும்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!