விசுவமடுவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகளுக்கு இராணுவத்தினர் இடையூறு!

1 week ago

Courtesy: Thavaseelan shanmugam

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டு ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக இன்று (26.10.2025) சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று (26.10.2025) காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள் காணப்படுகின்ற நிலைமையில் துயிலும் இல்லத்தில் ஒரு சிறிய பகுதியிலேயே குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இராணுவத்தினர் இடையூறு

அந்த வகையிலே குறித்த வளாகத்தின் முன் பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட வேளையில் குறித்த இடத்தில் இராணுவத்தினர் வருகைத்தந்து தமது முகாமுக்கு அருகில் உள்ள பகுதியில் வேலி கம்பங்களை அமைக்க வேண்டாம் என இடையூறு வழங்கியுள்ளனர்.

விசுவமடுவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகளுக்கு இராணுவத்தினர் இடையூறு! | Army Personnel Disrupt Vishwamadu

எனினும், குறித்த பகுதிக்கான வேலி அமைப்பு பணிகள் நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிர்வாகத்தினர்,“ இவ்வாண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெறுவதற்கான சிரமதான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய ஏற்பாடுகளும் இடம்பெறவுள்ளன.

மாவீரர்களின் பெற்றோர் உறவுகள் வருகைத்தந்து தொடர்ந்து இடம்பெறும் பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் துயிலும் இல்லத்தில் மிக நெருக்கடிக்குள்ளேயே மாவீரர் நாளை அனுஸ்டித்து வருவதாகவும் இந்த அரசாங்கமாவது இந்த மாவீரர் துயிலும் இல்ல காணியை முழுமையாக விடுவித்து தர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025