யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத சொத்துக் குவிப்பு மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (8), யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். “போதைப்பொருளைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி தலைமையில் எடுத்துள்ள நடவடிக்கைக்கு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இருந்தபோதும், யாழ்ப்பாணத்திலே இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பாக திருநெல்வேலி,கொக்குவில் பகுதிகளில் போதைப்பொருள் மாபியாக்கள் அடாவடி செய்துள்ளனர் என ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தெரிவித்தார்.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைப்பொருளை விற்று அதில் வருகின்ற பணத்தை வட்டிக்குக் கொடுத்து, வட்டிப் பணத்தைப் பெறுவதற்காக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, யாழ் மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த எடுக்கப்படவுள்ள நடவடிக்கை என்ன என்று அவர் வினவினார்.  இதற்குப் பதிலளிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.