பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா போதைப்பொருள் கடத்துவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தடவுலுக்கமைய நேற்று அதிகாலை அப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஒரு படகுடன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா தொகையும் மேலும் ஒரு படகும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சோதனை நடவடிக்கையில் 46 பொதிகளில் இருந்து சுமார் 100 கிலோ கஞ்சா மற்றும் கடத்தல் செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட படகு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அவர்களினால் போதை ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது போதைப்பொருள் மீட்பு சம்பவமாக இது பதிவாகியுள்ளததாக ருத்தித்துறை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நால்வரையும் சான்றுப்பொருட்களையும் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதி மன்றில் முற்படுத்தி தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










