“மிதிகம லசா“ கொலை: நிதி குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்கள்!

1 week ago

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்ற விசாரணை பிரிவில் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த கொலை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் முன்னெடுத்திருந்ததுடன், மேலதிக விசாரணைகளை நிதி குற்ற விசாரணை பிரிவு முன்னெடுக்கவுள்ளது.

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பான விசாரணைகளுக்காக காவல்துறை மா அதிபரின் கீழ் 10 ஆய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கைது 

அனுராதபுரம் - கெக்கிராவ பகுதியில் நேற்று (26.10.2025) அதிகாலை பெண்ணொருவர் உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இதன்போது அங்கிருந்து தப்பிச்சென்றிருந்த துப்பாக்கிதாரி மஹரகம - நாவின்ன பகுதியில் விசேட விசாரணை குழுவினரால் நேற்றைய தினம் மாலை வேளையில் கைது செய்யப்பட்டார்.

 நிதி குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்கள்! | Suspects Handver To Fcid Lasantha Wickramasekara

சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்காகப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்களிடமிருந்த 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மற்றும் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்ற விசாரணை பிரிவில் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.