ஜனாதிபதி நிதியிலிருந்து 56 நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு 130 கோடி ரூபாய்க்கும் அதிகமான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடுகள் 2005 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்டதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, மருத்துவ உதவியாக 56 நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு 131,371,110 ரூபாய் வழங்கப்பட்டாலும், இந்த நிதி உதவியை வழங்குவதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பது முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறிக்கையில் தகவல்
குறிப்பாக, முறையான விண்ணப்பத்தை சமர்ப்பித்தல், விண்ணப்பதாரரின் மாதாந்திர வருமான வரம்பு, பிரதேச செயலாளரின் அறிக்கை அல்லது நிதி சொத்துக்களின் மதிப்பீடு மற்றும் மருத்துவ உதவிக்காக வழங்கக்கூடிய தொகையின் வரம்புகள் ஆகியவை இந்த உதவியை வழங்கும்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பரிவர்த்தனைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன் முடிவுகளின் அடிப்படையில் மேலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியிலிருந்து கடனாக பணம் வழங்குவதற்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை எனினும், இரண்டு எம்.பி.க்களுக்கு மீள செலுத்தக்கூடிய அடிப்படையில் மருத்துவ உதவி வழங்கப்பட்டதாகவும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதி முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பதவிக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்டமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










