பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி மக்களை வெளியேற்ற திட்டம்! அம்பலப்படுத்தப்படும் தகவல்

1 week ago

பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் பெருந்தோட்டங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை குடியேற்ற திட்டமிடுகின்றார்களா?என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக யட்டியந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர் ஜி.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “யட்டியந்தோட்டை பிரதேசத்திற்கு உட்பட்ட பெருந்தோட்ட கம்பனிகள் தங்களுடைய பெருந்தோட்ட பகுதிகளை உரிய முறையில் பராமரிக்காமையின் காரணமாக தற்பொழுது அந்த காணிகள் அனைத்தும் காடுகளாக மாறியிருக்கின்றன.

இதன் காரணமாக பெருந்தோட்ட மக்கள் அந்த பகுதிக்கு வேலைக்கு செல்ல முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.


வேலைக்கு போக முடியாத நிலைமை 

அந்த பகுதிகளில் தற்பொழுது அதிக அளவில் வனவிலங்குகள் நடமாடும் இடமாக மாறியுள்ளது. இதன் காரணமாக எமது தொழிலாளர்கள் பெருந்தோட்ட பகுதிகளுக்கு வேலைக்கு போக முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி மக்களை வெளியேற்ற திட்டம்! அம்பலப்படுத்தப்படும் தகவல் | Action To Evict People From Plantation Areas

அதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய பாதுகாப்பற்ற நிலைமையாகும்.குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் தற்பொழுது சிறுத்தைகள் காட்டெருமைகள் குளவிக்கூடுகள் என்பன அதிக அளவில் காணப்படுவதால் தங்களுடைய பணிகளை உயிரை பணயம் வைத்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அவ்வாறு பாதிக்கப்படுகின்றவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் மேற்கொள்வதில்லை.

அதிகாரிகளின் அச்சுறுத்தல்

தோட்டங்களுக்கு வேலைக்கு வராதவர்களின் வீடுகளை தோட்ட நிர்வாகங்களிடம் கையளிக்குமாறு தோட்ட நிர்வாக அதிகாரிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.வீடுகளை கையளித்துவிட்டு அவர்கள் நடுவீதிக்கு செல்வதா? இது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி மக்களை வெளியேற்ற திட்டம்! அம்பலப்படுத்தப்படும் தகவல் | Action To Evict People From Plantation Areas

எனவே தோட்ட நிர்வாகங்கள் தங்களுடைய இயலாமையையே இங்கு காட்டுகின்றார்கள். எனவே தோட்ட நிர்வாகம் பெருந்தோட்டங்களை உரிய முறையில் பராமரிப்பு செய்து ஒரு பாதுகாப்பான நிலைமையில் தொழிலாளர்களுக்கு தொழிலை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இதனை தோட்ட நிர்வாகங்கள் செய்ய முன்வராவிட்டால் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக செயற்படுவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

இது தொடர்பாக மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.”

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025