2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டுப் பொருளாதார நிலைமைகள் மேம்படுவதும், உள்ளூர் ஊதியங்கள் அதிகரிப்பதும் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கை 143,037 ஆகும்.
கடந்த பொருளாதார நெருக்கடியின் போது அதிக அளவில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வெளியேற்றம், கடந்த பெப்ரவரி முதல் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இது உள்ளூர் தொழிலாளர் சந்தையின் நிலைத்தன்மையை பிரதிபலிக்கிறது.
தொழிலாளர்களின் எண்ணிக்கையில் குறைவு இருந்தபோதிலும், பணம் அனுப்புதல் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த செப்டெம்பர் மாதத்தில் பணம் அனுப்புதல் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
இது 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மூன்றாவது அதிகபட்ச மாதாந்திர வரவுகளாகும்.
இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 25.2% வருடாந்திர வளர்ச்சியாகும்.
2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஒட்டுமொத்த பண அனுப்புதல் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்சியது.
இது முந்தைய ஆண்டை விட 20% அதிகமாகும்.
மேலும் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தக் காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வலுவான செயல்திறன் இதுவாகும்.









