பிரித்தானியாவின் வால்சலில்(Walsall) இனவெறி தாக்குதலுடன் தொடர்புடைய பாலியல் அத்துமீறல் வழக்கில் 32 வயது நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் வால்சலில்(Walsall) பகுதியில் உள்ள பார்க் ஹாலில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடித்து அவசர உதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண் தனக்கு தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய நிலையில் காவல்துறையினர் இதனை இனவெறித் தாக்குதலாக கருதி விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் திங்கட்கிழமை பெர்ரி பார்(Perry Barr) பகுதியில் 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த பொதுமக்களுக்கு வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையின் துப்பறியும் அதிகாரி ரோனன் டைரர் நன்றியை தெரிவித்துள்ளார்.










