போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத்துறை மற்றும் அரச கட்டமைப்பிலுள்ள ஏனைய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக அந்த வலையமைப்பிலிருந்து விலக வேண்டும். அவ்வாறு அவர்கள் தாமாக விலகவில்லை என்றால் அதிகாரமுடையவர்களால் அரச துறையிலிருந்து அகற்றப்படுவர். எனவே அதிலிருந்து உடனடியாக விலகிவிடுங்கள். இல்லையெனில், நாங்கள் உங்களை அகற்றுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.
கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
பாதுகாப்பு துறையை தூய்மைப்படுத்தினால், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க முடியும் என்ற கருத்து சமூகத்தில் நிலவுகிறது. அது உண்மையான கருத்தாகும். பாதுகாப்பு துறைக்குத் தகவல் வழங்கினால், தகவலை வழங்கியவரைத் தேடி உடனடியாக இனந்தெரியாத நபர்கள் வருவதாகச் சிலர் கூறுகின்றனர்.
இதனை முடிவுக்குக் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதுகாப்பு பிரிவில் அதிகளவான இடைநிறுத்தங்கள் இடம்பெறும் காலம் இதுவாகும். நாம் பெருமளவிலான அதிகாரிகளை இடைநிறுத்தியுள்ளோம். ஏனைய அதிகாரிகளை உடனடியாக அந்த வலையமைப்பிலிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கின்றோம்.
பொது மக்களுக்கான வேலைத்திட்டத்தை நாம் கட்டியெழுப்புவோம். இந்த அழிவுக்கு எதிராக பரந்தளவில் குரல் கொடுப்பதும், அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதுமே அந்த பொது வேலைத்திட்டமாகும். தற்போது பொது மக்கள் பாதுகாப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. கிராம மட்டத்திலிருந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனர். குறித்த பொது மக்கள் பாதுகாப்பு குழுக்களிலுள்ள தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அதன் அங்கத்தவர்கள் நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவர்.
கைது செய்தல், புனர்வாழ்வளித்தல், நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு படிமுறைகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும். எந்த சந்தர்ப்பத்திலும் தனித்து இதனை செய்ய முடியாது. அரசாங்கத்தாலோ, பொலிஸாராலோ, அரச பொறிமுறையாலோ தனித்து இதனை இல்லாதொழிக்க முடியாது. எனவே இணைந்து இந்த சவாலை எதிர்கொள்வோம் என அழைப்பு விடுக்கின்றேன்.
அதேவேளை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்கும் இறுதியாக ஒன்றைக் கூறிக் கொள்கின்றேன். இவற்றிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள். இந்த மாயாஜாலப் புயலை நிச்சயம் நாம் கட்டுப்படுத்துவோம். போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட அச்சப்பட வேண்டாம். உங்களைப் பாதுகாப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். பொலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் புலனாய்வுப்பிரிவு என அனைத்து துறைகளையும் உள்ளடக்கி தேசிய ஒருங்கிணைப்பு மத்திய நிலையமொன்றை நிறுவுவோம்.
எனவே இனியும் எவருக்கும் ஒளிந்திருக்க வாய்ப்பில்லை. நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளவர்கள் யார் என்பதை இனங்கண்டுள்ளோம். அவர்கள் எங்கிருக்கின்றார் என்பதையும் அறிவோம். எனவே யாருக்கும் தப்பிச் செல்ல இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டையும், மக்களையும், எதிர்கால சந்ததியினரையும் மிகக் குறுகிய இந்தக் கூட்டத்துக்கு இரையாக்க இடமளிக்க முடியாது. நாட்டை ஆட்கொண்டுள்ள போதைப் பொருள் என்ற பேரழிவைத் தோற்கடிப்பதற்காக நாம் இங்கு ஒன்று கூடியிருக்கின்றோம். இங்கு நாம் தேர்ந்தெடுப்பதற்கு இரு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று இவற்றை அவ்வாறே விட்டு விட்டு பயணிப்பதாகவும். மற்றையது அவற்றை தோற்கடிப்பதற்கான சவாலை ஏற்று நடப்பதாகும். அந்த வகையில் எமது அரசாங்கம் இந்த போதைப்பொருள் கலாசாரத்துக்கு எதிராக மோதுவதற்கு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது.
நாட்டில் விளக்கமறியலில் வைக்கப்படுபவர்களில் 64 சதவீதமானோர் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களாவர். 18 – 26 வயதுக்கிடைப்பட்ட இளம் தலைமுறையினரே போதைப்பொருள் பாவனைக்கு பாரியளவில் அடிமையாகியுள்ளனர். எனவே அதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுபவர்களின் பெற்றோர் பாரிய நெருக்கடிகளையும், அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.
எந்த வகையிலும் இந்த நிலைமை தொடர்ந்து செல்வதற்கு இடமளிக்கப்பட முடியாது. இதனால் குற்றங்களாலான இராச்சியம் உருவாகியுள்ளது. இவற்றால் ஏற்படக் கூடிய வீதி விபத்துக்களால் பெருமளவான உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான துஷ;பிரயோகங்களில் போதைப்பொருள் பாவனை பெரும் பங்கு வகிக்கின்றது. அது மாத்திரமின்றி இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
போதைப் பொருள் பாவனையாளர்கள் மாத்திரமின்றி, முழு சமூகமும் அதற்கு இரையாகும் துரதிஷ;டவசமான சூழல் காணப்படுகிறது. எனவே இந்த பேரழிவை தோற்கடித்து இளம் சந்ததியினரை நாம் பாதுகாப்போம் என உறுதியளிக்கின்றேன். குறிப்பாக இவற்றுடன் தொடர்புடைய பாரிய பண பரிமாற்றமும் சமூகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. சில போதைப்பொருட்கள் ஒரு கிலோ சுமார் 2 கோடி ரூபாவாகும். அவ்வாறிருக்கையில் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரால் 800 – 900 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன.
இதுவரைக் காலமும் பதிவாகியுள்ள சகல துப்பாக்கிச்சூடுகளும் ஒன்றோடொன்று தொடர்புபட்டவையாகும். களுத்துறை மற்றும் கம்பஹா உள்ளிட்ட பல பிரதேசங்கள் குறிப்பிட்ட சில நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆங்காங்கு துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. போதைப்பொருள் பரிமாற்றத்துடன் தொடர்புடையவர்களிடம் காணப்படும் நிதி பலத்தைக் கொண்டு அவர்கள் அரச கட்டமைப்பையும் ஆக்கிரமித்துள்ளனர். அதில் பாதுகாப்பு பிரிவுகளும் உள்ளடங்குகிறது.
சில இராணுவ முகாம்களில் டீ56 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றுடன் தொடர்புடைய 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதுகாப்பு துறைகளுக்குள் ஓர் கருப்பு இராச்சியம் உருவாகியுள்ளது. மோட்டார் வானப் போக்குவரத்து திணைக்களத்தில் வாகனம் இன்றி இலக்க தகடு வழங்கப்பட்டிருக்கிறது. குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் சில அதிகாரிகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடவுச்சீட்டை வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு அரச கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கருப்பு இராச்சியம் இல்லாதொழிக்கப்படும். நாட்டில் மக்கள் வாத ஜனநாயக இராச்சியம் மாத்திரமே காணப்படும் என நாம் உறுதியளிக்கின்றோம் என்றார்.










