பாடசாலை நேர நீடிப்புக்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு!

2 days ago

பாடசாலை நேர நீடிப்பு தீர்மானம் ஒரு பொருத்தமற்ற முடிவு என்று தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.

உரிய  கலந்தாலோசனை செய்து தீர்மானம் எடுக்காது விட்டால் , எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்று அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பகுதியிலுள்ள பாடசாலையொன்றுக்கு விஜயம் செய்திருந்த போது, பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவுக்கு எதிராக கீழ்மட்டத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்த கருத்துக்கு ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது காலை 7:30 முதல் பி.ப 1:30 வரை இருக்கும் பாடசாலை நேரத்தை 2 மணி வரை நீடிப்பதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மன ஒருமைப்பாட்டை பேணுவது கடினமாகிவிடும். இதன் மூலம் எந்தவொரு நன்மையும் ஏற்படாது. மாறாக, பாதகமான நிலையே உருவாகும்.

ஆசிரியர் ஒருவர் காலை 7:30 முதல் 1:30 வரை மட்டுமல்லாமல், வீட்டுக்குச் சென்ற பிறகும் அடுத்த நாளுக்கான தயாரிப்பு வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதிபர்கள் காலை 7:30 முதல் பி.ப 7:30 வரை (10 மணி நேரத்துக்கும் மேல்) நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரை மணி நேரம் பாடசாலை நேரத்தை நீடிப்பதன் மூலம், அதிபர்களின் கண்காணிப்புப் பொறுப்பு மேலும் அதிகரிக்கப்படுகிறது. நீடிக்கப்பட்ட அந்த அரை மணி நேரத்தில், கல்வி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது 20 நிமிடங்கள் மட்டுமே.

மீதி 10 நிமிடங்கள் அர்த்தமற்ற ஒரு இடைவேளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடுமையான பகல் நேரத்தில் மாணவர்களைப் பாடசாலையில் தேவையற்ற தக்க வைப்பு என்பதுடன், கல்விப் பணிகளுக்கு உதவாது

கீழ்மட்டத்தில் ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்கப்படவில்லை” என்று பிரதமர் கூறுவது தவறானது. பாடசாலை நேர நீடிப்பு குறித்த தங்கள் எதிர்ப்பை கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்.

பெலவத்தையில் போடப்பட்டுள்ள தடைகளே, கல்வி அமைச்சுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் எந்த ஒரு விடயமும் அவருக்குத் தெரியாமல் இருப்பதற்கு காரணமாகும்.

இந்தத் தடைகளைத் தாண்டி கள நிலவரங்கள் பிரதமரின் காதுகளுக்குப் போவதில்லை. அதேநேரம், இந்த மேலதிக நேரத்தைக் கட்டாயமாகத் திணிப்பதாக இருந்தால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை மேலதிக நேரம் கடமையில் வைத்திருப்பதற்காக அவர்களுக்கு உடனடியாக மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள வேதன முரண்பாட்டுக்கு மத்தியில் மேலதிக கொடுப்பனவின்றி சேவையைப் பெறுவது நியாயமற்றது. எனவே, பாடசாலை நேர நீடிப்பு குறித்து தொழிற்சங்கங்களுடன் நிச்சயமாகவும் தெளிவாகவும் கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்.