கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்காக இந்திய மானியத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட நிதி உதவித் திட்டத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று ஆரம்பித்து வைத்தார்.
இதேவேளை, முன்னதாக, முந்தைய கல்வியாண்டில் பல்கலைக்கழகத்தில் இந்திய மானியத்தின் கீழ் ஒரு நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அங்கு பொருளாதார பின்னணி மற்றும் கல்வி செயல்திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்களுக்கு மாதத்திற்கு இலங்கை ரூபாவில் 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
மேலும் இந்த திட்டத்தை நீட்டிக்கவும் மேம்படுத்தவும் பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டன.
கடந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட திட்டத்தை வழங்க உள்ளதாக அறிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், இந்த கல்வியாண்டிலிருந்து , ஒவ்வொரு ஆண்டும், முதல் ஆண்டில் 100 இளங்கலை மாணவர்களுக்கு மாதத்திற்கு 7500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனவும் மேலும் அந்தந்த கல்வி நிலைகள் முடியும் வரை இது தொடரும் எனவும் இவ்வாறு, திட்டத்தின் நான்காவது ஆண்டில், பல்கலைக்கழகத்தில் 400 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் சந்தோஷ் ஜா இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் தங்கள், நிதி உதவிக்காக இந்திய அரசுக்கு ஆழ்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.











