”மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான யாவராவது ஒருவரைத்தான் எமது சார்பிலான முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் நாம் கோரியிருக்கின்றோம் எனவும் கூறினார்.

மாகாண சபைத் தேர்தல் விரைந்து நடக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. இதில் முதலமைச்சர் வேட்பாளரைப் பொறுத்த வரையில் எங்களது கட்சியின் தெளிவான நிலைப்பாடு, கட்சிக்குள்ளே இருந்துதான் நாங்கள் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம்.
எனினும், எங்களுடைய கட்சியில் அங்கத்தவராக இருப்பவர்தான் கட்சி என்றும் எடுக்க மாட்டோம்.

யாழ்ப்பாணத்திலோ – வடக்கு மாகாணத்திலோ எங்களோடு இணங்கிச் செயற்பட்டுக் கட்சியோடு இருந்தவர்கள், கட்சிக்காக வேலை செய்தவர்கள், உழைத்தவர்கள் என அவர்களில் ஒருவரைத்தான் நாங்கள் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம்.” – எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் மேலும் குறிப்பிட்டார்.