இலங்கை கடல் பரப்பில் கடற்படையினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு பலப்படுத்தினாலும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வடக்குமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழையாது இருக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3) திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்திய படகுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய படகுகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை கடல் பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் இடம்பெற்ற தொடர்ச்சியான கைதுகளில் இதுவும் ஒன்றாக காணப்படுகின்றது.
இலங்கை கடற்பரப்பில் நுழையாதீர்கள் என எத்தனையோ தடவைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதும்,தொடர் கைதுகள் இடம்பெற்று வருகின்றது.
தமிழக கடற்றொழிலாளர்கள் தமிழகத்தில் தொழில் செய்வதை விட இலங்கை கடற்பரப்பில் தான் தொழில் செய்கின்றனரோ என எண்ணத் தோன்றுகின்றது.
தொடர் கைதினதல் தமிழக கடற்றொழிலாளர்கள் படுகின்ற துன்பங்களையும்,வேதனைகளையும் நாங்கள் பார்த்து வந்தாலும், தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடு படுவதை ஏன் நிறுத்துகிறார்கள் இல்லை என்கின்ற கேள்வியும் எழுகின்றது” என தெரிவித்துள்ளார்.
செய்தி - நயன்









