க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கௌரவிப்பு!

2 days ago

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023 மற்றும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று நடைபெற்றது.

பதுளை நூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் 1-10 இடங்களைப் பெற்ற 240 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதற்காக ஜனாதிபதி நிதியத்தால் 24 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

இதேவேளை தற்போதைய அரசாங்கம் கல்வியில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்து வருவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இதன்போது குறிப்பிட்டார்

குழந்தைகள் பெறும் கல்வி மூலம் நாட்டிற்கு சேவை செய்தால், அந்த முதலீட்டின் பலனை நாடு அடைய முடியும் என்று சபாநாயகர் தெரிவித்தார் .

இதேவேளை நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை நெறிப்படுத்தும் நோக்கில் பிராந்திய மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன் தகுதியான பயனாளிகள் தற்போது நிதியத்தின் நன்மைகளைப் பெற்று வருவதாக கூறினார்.