ஐந்து நூற்றாண்டுகளுக்குள் மூன்று தடவைகள்  பிடுங்கி எறியப்பட்ட சமூகம் – நிலாந்தன்.

2 days ago

கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட,இலங்கைத் தீவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட சந்திப்பின்போது நடந்த ஒரு விடயத்தைப்பற்றி ஒரு தமிழ்க் கட்சிப் பிரமுகர் என்னிடம் சொன்னார்.அந்தச் சந்திப்பில் அரசுசார்பு பிரதிநிதியாக கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் ஒரு கட்டத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரித்து உண்மை காணப்பட வேண்டும் என்ற பொருள்படப் பேசியுள்ளார்.அப்பொழுது அங்கு அவரோடு வந்திருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளராகிய ஒரு தமிழர் சொன்னாராம்,பழைய காயங்களை திரும்பத்திரும்ப கிண்டிக்  கொண்டிருக்கக்கூடாது. அப்படிக் கிண்டினால் அவை ஆறாது என்ற பொருள்பட.

அவர்  தேசிய மக்கள் சக்திக்குள் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்தான் இணைந்தவர்.அக்கட்சியின் சிங்களப் பிரதிநிதி உண்மையை விசாரிக்க வேண்டும் என்று கூற அவரோ,பழைய காயங்களைக்  கிண்டக் கூடாது என்று கூறுகிறார். அதன்மூலம் கட்சிக்குத் தன்னுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்கு அந்தச் சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது அரசாங்கமே ஒரு தமிழ்ப் பிரதிநிதியூடாக அதைச் சொல்ல வைத்திருக்கலாம்.

இவ்வாறு தமது பழைய காயங்களை நினைவுகூர வேண்டும்;அவற்றுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்பதைப் போலவே முஸ்லிம் மக்களும் தங்களுடைய பழைய காயங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்பதில் தவறு ஏதும் உண்டா ?

கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வலிந்து அகற்றப்பட்டதை நினைவு கூரும் ஒரு நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டது.தந்தை செல்வா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தார்கள் என்ற பொருள்பட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.அந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்த ஒரு தரப்பு இந்த வார்த்தைக் குழப்பம் காரணமாக அங்கு வரவில்லை.

அதேசமயம் நிகழ்வின் தொடக்கத்தில் உரை நிகழ்த்திய அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்திய தந்தை செல்வா அறக்கட்டளையின் தலைவராகிய இளங்கோவன்-இவர்  செல்வாவின் பேரன்-அவ்வாறு பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு  தான் பயப்பட்டார் என்ற பொருள்பட பேசினார்.அந்த நிகழ்வை ஒரு விவகாரமாக மாற்றி அதனாலேயே சர்ச்சைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர்  கூர்மையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம்  என்று  ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

அந்த நிகழ்வில் பேசிய யாழ் மாநகர சபையின் முஸ்லிம் பிரதிநிதி, முஸ்லிம்கள் அவ்வாறு அகற்றப்பட்டது இனச்சுத்திகரிப்பு  என்று கூறினார். அந்த வார்த்தையைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மத்தியில் சுமந்திரன் மட்டுமே பயன்படுத்தியிருப்பதாகவும் அங்கு சுட்டிக்காட்டினார்.

அதேசமயம் முஸ்லிம்களை மீளக் குடியமர்த்தும் விடயத்தில் தமிழ் அதிகாரிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று பொருள் கொள்ளத்தக்க விதத்தில் அவருடைய உரை அமைந்திருந்தது.

மேலும் அங்கு பேசிய மௌலவி சுபியான் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்படுகையில் கிட்டத்தட்ட 650 கடைகள் முஸ்லிம்களிடம் இருந்தது என்றும், நகரப் பகுதியில் வணிகம் பெருமளவுக்கு முஸ்லிம்களின் கையில் தான் இருந்தது என்றும் கூறினார்.ஆனால் தாங்கள் மீளக்குடியமர்ந்த பொழுது தாங்கள் முன்பு குடியிருந்த கடைகள் பல கிடைக்கவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார்.முன்பு முஸ்லிம்கள் வாடகைக்கு வைத்திருந்த கடைகளில் பல கோவில் அறக்கட்டளைகளுக்கு சொந்தமானவை.மீளக் குடியமர்ந்தபின் மீண்டும் அதே கடைகளை தாங்கள் கேட்டபோது அவை தங்களுக்குத் தரப்படவில்லை என்றும் அவர் குறைபட்டுக் கொண்டார்.

மேற்சொன்ன இருவருடைய கருத்துக்களையும் தொகுத்துப் பார்த்தால்,கடந்த 16 ஆண்டுகளிலும்  பௌதிகரீதியாக மீளக் குடியமற்றப்பட்டாலும்கூட மனோ ரீதியாக முஸ்லிம்கள் மீளக் குடியமரவில்லை என்பது தெரிந்தது.

அதுபோலவே முகநூலில் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு பகுதியினருடைய வாதப் பிரதிவாதங்களைப் பார்க்கும்போதும் இரண்டு சமூகங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி தெரிகிறது.

வடக்கில்,குறிப்பாக யாழ்ப்பாணத்தில்,முஸ்லிம்கள் தமது வாழிடங்களில் இருந்து அகற்றப்பட்டமை என்பது கடந்த ஐந்து நூற்றாண்டு காலப் பகுதிக்குள் மூன்று தடவைகள் இடம்பெற்றிருக்கிறது. முதலாவது தருணம் போத்துக்கீசர் காலம். 1614ஆம் ஆண்டு. போர்த்துக்கீசர்கள் இப்பொழுது யாழ்ப்பாண கோட்டை அமைந்திருக்கும் பகுதியில் ஒரு தேவாலயத்தை அமைக்க முற்பட்டார்கள். அந்தத் தேவாலயத்துக்கு முதலில் வெற்றி மாதா தேவாலயம் என்று பெயர் வைக்கப்பட்டது.பின்னர் அது புதுமை மாதா தேர்வாலயம் என்று அழைக்கப்பட்டது.அந்தத் தேவாலயத்தை அங்கே அமைக்க முற்பட்ட பொழுது அங்கு ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களை போத்துக்கீசர்கள் அங்கிருந்து கட்டாயமாக அகற்றினார்கள்.

அடுத்த வெளியேற்றம் நல்லூரில் நிகழ்ந்தது. “யாழ்ப்பாண வைபவ மாலை”யில் அது தொடர்பான விபரங்கள் உண்டு. அந்த நூலின் 91ஆம் பக்கத்தில் அது கூறப்பட்டுள்ளது.நல்லூர் பகுதியில் வசித்து வந்த முஸ்லிம்களை அங்கிருந்து போகுமாறு இந்துக்கள் நிர்பந்தித்தார்கள்.காணிகளை தங்களுக்கு விற்குமாறு இந்துக்கள் நிர்பந்தித்தார்கள்.முஸ்லிம்கள் அசையவில்லை.இந்துக்கள் முஸ்லிம்களுடைய கிணறுகளில் பன்றி மாமிசத்தை போட்டார்கள். முஸ்லிம்கள் அந்த இடத்திலிருந்து வெளிக்கிட்டு நாவந்துறைக்கு அப்பால் சென்று குடியேறியதாக யாழ்ப்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளது. அதை ஒரு வரலாற்று நூலாக எடுத்துக் கொண்டு இந்த தகவலை நம்பலாமா என்ற கேள்வி உண்டு.ஆனால் அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. குறிப்பாக இப்போது இருக்கும் நல்லூர் கோவில் வளாகத்துக்குள் ஒரு முஸ்லிம் ஞானியின் சமாதி உண்டு.

மூன்றாவது சந்தர்ப்பம்,ஈழப் போராட்டத்தில் நிகழ்ந்தது.1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்30ஆம் திகதி,முஸ்லிம்கள் வடக்கிலிருந்து அகற்றப்பட்டார்கள். அந்தத் துயரத்தைத்தான் இப்பொழுது அவர்கள் நினைவு கூர்கிறார்கள்.

இங்கு கூறப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும் முதலாவதாக போத்துக்கீசர்கள் முஸ்லிம்களை அகற்றினார்கள்.அதில் தமிழர்களுக்குப் பொறுப்பில்லை. இரண்டாவதாக இந்துக்கள் அகற்றினார்கள். மூன்றாவதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அகற்றியது. இதில் முதலிரு சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் இடமாறி வேறு இடத்தில் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே குடியேறினார்கள்.ஆனால் மூன்றாவது சந்தர்ப்பத்தில் அவர்கள் வேரை அறுத்துக்கொண்டு வடக்குக்கு வெளியே சிதறிப் போனார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த முடிவைப் பின்னர் மறு பரிசீலனை செய்து முஸ்லிம்களை வடக்குக்குள் வர அனுமதித்தது.அப்பொழுது முஸ்லிம்களின் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்த ரவுப் ஹக்கீமோடு விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் உடன்படிக்கையை எழுதிக்கொண்டது. அந்த உடன்படிக்கைக்குப் பின் ஈழப் போர் பரப்பிற்குள் தமிழ் தரப்பினால் முஸ்லிம்கள் அநேகமாகக் கொல்லப்படவில்லை.

தமிழ் மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக சிங்கள அரசியல் சமூகம் பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கின்றார்கள். முஸ்லிம்களும் அவ்வாறு தமிழ் மக்களிடம் கேட்பதில் தவறில்லை.

முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றிய அமைப்பு அந்த முடிவை மீளப் பரிசீலித்து மாற்றிக் கொண்டது.ஒருவிதத்தில் அங்கிருந்து பொறுப்புக்கூறல் தொடங்குகின்றது. இப்பொழுது உள்ள தமிழ் அரசியல் சமூகம் அந்தப் பொறுப்புக் கூறலை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் செல்ல வேண்டும்.

வடக்கில் முஸ்லிம்கள் அகற்றப்பட்டமை என்பது வெற்றிடத்தில் நிகழவில்லை. அது கிழக்கில் நடந்தவைகளின் விளைவு. தந்தை செல்வா கலையரங்கில் 31 ஆம் திகதி நடந்த நிகழ்வில் ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.அந்த ஒளிப்படங்கள் ஈழப் போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துயரமான அனுபவங்களைச் சித்தரிப்பவை. ஆனால் கிழக்கில் போய்க் கேட்டால்,தமிழ் மக்களும் அதுபோல ஆயிரக்கணக்கான ஒளிப்படங்களை காட்சிக்கு வைப்பார்கள்.

இங்கே உற்றுக்கவனிக்க வேண்டிய வேறுபாடு  ஒன்று உண்டு.தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பொறுத்தவரை வடக்கின் களயதார்த்தம் வேறு.கிழகின் களயதார்த்தம் வேறு.ஆனால் கிழக்கில் நடப்பவற்றின் விளைவுகள்தான் வடக்கைப் பாதிக்கின்றன.கிழக்கில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட  முஸ்லிம் துணைப் படைகளின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் மக்களிடம் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் உண்டு.

தமிழ் முஸ்லிம் ஐக்கியம் எனப்படுவது வடக்கிலிருந்து அல்ல,கிழக்கிலிருந்து தான் கட்டியெழுப்பப்பட வேண்டும்.வடக்கில் மட்டும் அதனைக் கட்டியெழுப்ப முடியாது. தமிழ்மக்கள் தமது தாயகம் என்று கருதும் நிலப்பரப்பிற்குள் தமிழ் முஸ்லிம் உறவுகள் என்று வரும்பொழுது ஒப்பீட்டளவில் வடக்கை விடவும் கிழக்கில்தான் சவால்கள் அதிகம்.கிழக்கில்தான் இடைவெளிகள் அதிகம். இப்பொழுதும் கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கிக்குள்ளும் தமிழ் தேசியத்துக்கு எதிராகவும் வடக்கிற்கு எதிராகவும் கிழக்குமைய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளின் வாக்கு வங்கிக்குள்ளும் கணிசமான தொகை முஸ்லிம் எதிர்ப்பு வாக்குகள் உண்டு. எனவே தமிழ்-முஸ்லிம் ஐக்கியம் எனப்படுவது கிழக்கில் எப்பொழுதும் சவால்கள் மிகுந்ததுதான். கடந்த 31 ஆம் திகதி தந்தை செல்வா கலையரங்கில் நடந்த நிகழ்வில் கருத்துரைகளுக்கு பின் நடந்த கலந்துரையாடலுக்கு வசதிப்படுத்தினராகச் செயற்பட்ட, கிழக்கிலிருந்து வந்த ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் அதைச் சுட்டிக்காட்டினார்.

எனவே தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பொறுத்தவரை இரண்டு தரப்புமே கடந்த காலத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.குறிப்பாக, அனைத்துலக  சமூகத்தையும் சிங்கள சமூகத்தையும் தமக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் தமிழ்மக்கள்,தமது தாயகப் பரப்பிற்குள் வாழும் எண்ணிக்கையால் சிறிய சமூகத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும். பண்பாட்டுச் செழிப்பு மிக்க தமிழ் இனத்தின் அரசியல் நீதி எது என்பதை தமிழ் மக்கள் முதலில் காட்டவேண்டிய இடம் அது.