பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, தங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக கைத்துப்பாக்கிகளை வழங்குமாறு இருபது எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத் தலைவர்களிடமும் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, இந்தக் கோரிக்கைகள் ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முடிவு
இருப்பினும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கைத்துப்பாக்கிகள் வழங்க அரசாங்கம் முடிவு செய்யவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டன, ஆனால் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு அது நிறுத்தப்பட்டது.
அதனைதொடர்ந்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் உறுதிசெய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு மட்டுமே துப்பாக்கியை வழங்க அரசாங்கம் முடிவு செய்ததிருந்தது.
பாதுகாப்பு கலந்துரையாடல்
இதற்கிடையில், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, தங்கள் பாதுகாப்பு குறித்து ஆராய காவல்துறை மா அதிபரை நாடாளுமன்றத்திற்கு வரவழைக்குமாறு சபாநாயகரிடம் சமீபத்தில் கோரிக்கை விடுத்தது.

அதன்படி, சபாநாயகருக்கும் அந்த எம்பிக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.










